தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை விமான நிலையத்தில் வைஃபை சேவையைப் பயன்படுத்துவோர் அதிகரிப்பு

1 mins read
841c7eda-f471-48f4-8837-04bb4cfcbe20
பயணிகள் 500MB தரவு அல்லது 45 நிமிடங்கள் வரை வைஃபை வசதியைப் பயன்படுத்தலாம் - படம்: இணையம்

சென்னை: சென்னை விமான நிலைய அனைத்துலக முனையத்தில் இணையச் சேவையைப் பயன்படுத்துவது பற்றி பயணிகள் இனி கவலைப்படத் தேவையில்லை. அண்மையில் தொடங்கப்பட்ட இலவச வைஃபை சேவை, பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அச்சேவை தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே நூற்றுக்கணக்கானோர் அதைப் பயன்படுத்தியுள்ளனர்.

விமான நிலைய அதிகாரிகளின் தகவலின்படி, சேவை தொடங்கப்பட்ட ஜூன் 26ஆம் தேதி 421 பயணிகள் வைஃபையுடன் இணைந்தனர். ஜூன் 29க்குள் இந்த எண்ணிக்கை 636ஆக அதிகரித்தது.

வைஃபை சேவை குறித்து கூடுதலானோர் அறிந்து வருவதன் காரணமாக வரும் நாள்களில் பயனர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பதை விமான நிலைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஏறக்குறைய 18,000 அனைத்துலகப் பயணிகள் சென்னை விமான நிலையத்துக்கு வந்துசெல்கின்றனர்.

பயணிகள் 500MB தரவு அல்லது 45 நிமிடங்கள் வரை (இவற்றில் எது முதலில் எட்டப்படுகிறதோ) வைஃபை வசதியைப் பயன்படுத்தலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய சிம் அட்டை உடையோர் OTP மூலம் வைஃபையுடன் இணையலாம். இந்திய சிம் அட்டை இல்லாத வெளிநாட்டவர்கள் தங்கள் கடப்பிதழ் அல்லது விமானப் பயணச்சீட்டுகளை அங்குள்ள கணினிக்கூடங்களில் வருடி OTPஐ பெற்று வைஃபை வசதியைப் பயன்படுத்தலாம்.

இதுநாள் வரை வைஃபை சேவையை வழங்காததால் சென்னை விமான நிலையம் கடும் குறைகூறலுக்கு உள்ளாகியிருந்தது. குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் டாக்சிக்கு முன்பதிவு செய்வதிலும் அன்புக்குரியவர்களை அழைப்பதிலும் சிரமம் எதிர்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்