சென்னை: திரைப்பட நடிகர் ஆர்யாவுக்குச் சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தற்போது தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு, சென்னையில் சில உணவகங்களும் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை சாயிஷாவை காதல் மணம் புரிந்து, ஒரு குழந்தைக்குத் தந்தையாகி உள்ள ஆர்யா, தற்போது ‘ரியல் எஸ்டேட்’ தொழிலிலும் கவனம் செலுத்துகிறார்.
ஆர்யாவின் இத்தொழில்கள் அனைத்தையும் அவரது சகோதரர் சத்யா கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆர்யாவுக்குச் சொந்தமான ‘ஸீ ஷெல்’ (Sea Shell) என்ற பெயரில் இயங்கி வரும் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை (ஜூன் 18) திடீர் சோதனை நடவடிக்களை மேற்கொண்டனர்.
சென்னை வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஆர்யாவின் உணவகங்களில், புதன்கிழமை காலை முதல் இந்தச் சோதனை நடைபெற்றது.
ஆர்யா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் உரிய வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளதாகவும் அதன் பேரில், கேரள மாநிலம், கொச்சி பிரிவைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னைக்கு வந்து சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை சோதனை நடத்த வந்தபோது, ஓரிரு உணவகங்கள் திறக்கப்படாத நிலையில், உள்ளே நுழைய முடியாமல், முதற்கட்டமாக அங்கிருந்த பாதுகாவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. சோதனை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான தகவல்கள் பரவிய போதிலும், வருமான வரித்துறை தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வத் தகவலும் வெளியாகவில்லை.