சென்னை: சென்னை மாநகரை மேலும் அழகுபடுத்தும் விதமாக, மிக விரைவில் நூறு ஏக்கர் பரப்பளவில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
மொத்தம் ரூ.4,832 கோடி செலவில் பிரம்மாண்ட பசுமைப் பூங்காவாக இது அமையும் என்றும் மலர்ப் படுக்கைகள், மலர் சுரங்கப்பாதை, கண்ணாடி மாளிகை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வசதிகள் பூங்காவில் இடம்பெறும் எனவும் தெரியவந்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கிண்டி பகுதியில் உள்ள மிகப்பெரிய திடலில் குதிரைப் பந்தயம் நடத்தப்பட்டு வந்தது. இந்தத் திடல் ‘சென்னை ரேஸ் கிளப்’ நிறுவனத்திற்கு குத்தகையாக வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் அந்த நிலம் மீட்கப்பட்டதை அடுத்து, அங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்குப் பூங்கா, பசுமைப் பரப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அரசுப் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட, 4,832 கோடி ரூபாய் மதிப்பிலான, 118 ஏக்கர் நிலம், தோட்டக்கலைத் துறையிடம், நில மாற்ற முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்ட இடத்தில் பசுமைப் பூங்காவை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் வடிவமைப்பையும் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக, தோட்டக்கலைத்துறை இப்பணிக்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர உள்ளது.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே மக்களின் பொழுதுபோக்கிற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை மனதிற்கொண்டு சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக இந்தப் பூங்கா உருவாக்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்ணாடி மாளிகை, வண்ணத்துப்பூச்சித் தோட்டம், மூலிகைக் குன்றுகள், குழந்தைகள் விளையாட்டு மையம், நடைபாதைகள், வாடிக்கையாளர்களுக்கான அம்சங்களுடன் கூடிய பொது மண்டபங்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இது, சென்னைக்குள் அமைக்கப்படும் மிகப்பெரிய பசுமைப் பூங்காவாகும். மக்களுக்கு இயற்கையை அனுபவிக்க, ஓய்வெடுக்க, மனஅமைதியைப் பெறும் இடமாக இது மாறும் என்றும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் அழகை மேம்படுத்தி, நகரின் மதிப்பை உயர்த்துவதுடன், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இப்பூங்கா உள்ளூர் வணிகத்திற்கு உதவும் என துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும், மக்கள் உடற்பயிற்சி செய்ய, குடும்பத்துடன் நேரம் செலவிட ஏற்ற இடமாக இப்பூங்கா இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.