சென்னை: தமிழகம் முழுதும் கனமழை பெய்துவரும் நிலையில் பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்குப் பருவ மழைக் காலங்களில் ஏற்படும் சிரமங்கள், விபத்துகள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக ஆய்வு அலுவலர்களும் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21)அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை, பள்ளிக் கட்டடங்களின் வெளிப்புற, உட்புறச் சுவர்கள், மேல் தளங்கள், கூரைகள் ஆகியவற்றில் தாவரங்கள் வளர்ந்திருந்தால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.
மேலும், “மாதந்தோறும் ஒருமுறை பராமரிப்பு ஆய்வு மேற்கொண்டு மீண்டும் தாவரங்கள் வளர்வதைத் தடுக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவா்களுக்கும் பள்ளி வளாகத்தைச் சுத்தமாகப் பராமரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கான செலவினத்தைப் பள்ளி பராமரிப்பு நிதி, அனுமதிக்கப்பட்ட பிற நிதிகளிலிருந்து பயன்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிக் கட்டடங்களின் தூய்மை, பொலிவான தோற்றம் ஆகியவற்றை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் கூறப்பட்டது.

