சென்னை: சென்னை விமான நிலையம் அருகே ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் சரவண பவன் சைவ உணவகம் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.300 கோடி அரசு நிலத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
ஆலந்தூர் எம்.கே.சாலை-ஜிஎஸ்டி சாலைச் சந்திப்பில் உள்ள 40,000 சதுர அடி அரசு நிலம், சரவண பவன் நிர்வாகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், குத்தகைக்காலம் முடிந்தும் நிலத்தை அரசிடம் ஒப்படைக்காமல், அங்கு தொடர்ந்து சரவண பவன் உணவகம் செயல்பட்டு வந்தது.
இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் உணவக நிர்வாகம் இடத்தைக் காலி செய்யவில்லை. இதையடுத்து, அந்த நிலத்தைக் கையகப்படுத்த முடிவு செய்த செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், ஆலந்தூர் உரிமையியல் நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதை எதிர்த்து உணவக நிர்வாகம் சார்பில், கோகுல கிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோகுல கிருஷ்ணணின் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், அந்த நிலத்தை மீட்க வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, செங்கல்பட்டு ஆட்சியரின் உத்தரவின்படி, வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) சரவண பவன் உணவகத்துக்குச் சென்றனர்.
அங்கு நீதிமன்ற உத்தரவைக் காண்பித்த அவர்கள், அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, உணவகத்தின் நுழைவாயில்களை மூடி சீல் வைத்தனர். பொக்லைன் இயந்திரம் மூலம் உணவகத்தின் பெயர்ப் பலகைகளை இடித்து அகற்றிய அவர்கள், அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என அந்த வளாகத்தின் நுழைவாயிலில் அறிவிப்புப் பதாகையை அமைத்தனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.300 கோடி மதிப்பு என செங்கல்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.


