சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலை வழி பிரசார நிகழ்வுகள் தொடர்பாக தமிழக அரசு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொதுக்கூட்டங்களில் சேதம் ஏற்பட்டால் ஈடு செய்வதற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து ரூ.20 லட்சம் வரை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
பொதுக்கூட்டம் நடக்கும் இடம், வழித்தடம், நாள், நேரம், எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச கூட்டம், பங்கேற்கும் முக்கியப் பிரமுகர்கள், பேச்சாளர்கள், கூட்டத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை, வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.
அண்மையில் கரூரில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது திடீரென ஏற்பட்ட நெரிசலையடுத்து, 41 பேர் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தமிழக அரசைக் குற்றஞ்சாட்டின. பதிலுக்கு, ஆளும் தரப்பினர் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற ஆலோசனைப்படி இனி தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள், சாலை வழி பிரசார நிகழ்வுகளுக்குப் பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்து அறிவிப்பார் என்றும் குறிப்பிட்ட இடங்களில் நிகழ்ச்சியன்று கூடும் மக்கள் கூட்டம் குறித்து சம்பந்தப்பட்ட கட்சியினர், அமைப்பினர் முன்கூட்டியே விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கூட்டம் நடப்பதற்கு குறைந்தபட்சம் ஐந்து நாள்களுக்கு முன் அனுமதி வழங்கப்படும். அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில், அதற்கான காரணத்தை எழுத்துபூர்வமாக அதிகாரி தெரிவிப்பார்.
ஒரு கூட்டம் நடக்கும்போது பொதுச்சொத்துகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதை ஈடு செய்ய, 10,000 பேர் கூடும் கூட்டங்களுக்கு ரூ.1 லட்சமும் 20,000 பேர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ரூ.3 லட்சமும் 20,000 முதல் 50,000 பேர் வரை பங்கேற்கும் கூட்டங்களுக்கு ரூ.8 லட்சமும் 50,000 பேருக்கு மேல் என்றால் ரூ.20 லட்சமும் நிர்ணயிக்கப்படலாம்.

