சென்னை: மெரினா கடற்கரைக்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைகொடுக்கும் வகையில், நான்கு சக்கர நாற்காலிகளை அறிமுகப்படுத்தி உள்ளது சென்னை மாநகராட்சி நிர்வாகம்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை, சிறந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கி வருகிறது. இதற்கென சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.
அதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சக்கர நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு ஏற்கெனவே நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை மெரினா, திருவான்மியூர் உள்ளிட்ட ஆறு கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கான கட்டமைப்புகளை அந்தந்த கடற்கரைகளிலும் ஏற்படுத்தும் பணிகள் வேகம் பெற்றுள்ளன.
மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்படும் மற்ற நடவடிக்கைகள் மூலம் இந்தக் கடற்கரைப் பகுதிக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைப்பதுடன், சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொருளியல் வளர்ச்சிக்கும் இந்த ஏற்பாடு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெரினா கடற்கரையில் புதிய நடைபாதை, சைக்கிள் வழித்தடங்கள், விளையாட்டுப் பகுதி, கண்காணிப்புக் கோபுரம், 360 டிகிரியில் சுழலும் கண்காணிப்புக் கேமரா, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
“மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை அருகே நான்கு சக்கர நாற்காலிகள் இரண்டு வைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த நாற்காலியின் சக்கரங்கள் பலூன்கள் போன்று இருக்கும். எனவே, கடற்கரை மணற்பகுதியிலும் எளிதில் இயக்க முடியும். மேலும், மூங்கிலால் செய்யப்பட்ட தியான மேடை அமைக்கும் திட்டமும் உள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

