காட்டு யானைகளுக்கு பெயர் சூட்ட வனத்துறை தடை

2 mins read
2569abd6-9cc3-43ed-a024-5dbef2bc7923
குறிப்பிட்ட யானைகள் குறித்து மக்கள் மத்தியில் எதிர்மறை எண்ணம் ஏற்படுவதாக ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: காட்டு யானைகளுக்கு இனி பொதுமக்கள் பெயர்சூட்டக் கூடாது என தமிழக வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. இனி யானைகள் குறியீட்டு எண்கள் என்ற அடிப்படையில் மட்டுமே அடையாளப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் யானைகளுக்கு ‘அரிசி கொம்பன்’, ‘படையப்பா’, ‘பாகுபலி’, ‘ரிவால்டோ’ என உள்ளூர் மக்கள் சில காரணங்களின் அடிப்படையில் பெயர் சூட்டுகின்றனர்.

இதனால் அக்குறிப்பிட்ட யானைகள் குறித்து மக்கள் மத்தியில் எதிர்மறை எண்ணம் ஏற்படுவதாக ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ‘ஓசை’ என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ஓசை காளிதாசன் விளக்கம் அளித்துள்ளார்.

“அண்மைக் காலமாக தமிழகத்தின் சில பகுதிகளில் ஊருக்குள் அடுத்தடுத்து பலமுறை நுழையும் யானைகளுக்கு உள்ளூர் மக்கள் பெயர் சூட்டுகின்றனர். ஆனால், இந்தப் பெயர்கள் பரவலாகப் பிரபலமடையும்போது அந்த யானைகள் குறித்து மக்கள் மனத்தில் தவறான பிம்பம் உருவாகிறது.

“எனவே, வனப்பகுதிகளில் யானை, புலிகளை குறியீட்டு எண்கள் அடிப்படையில்தான் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் விலங்குகள் குறித்த எதிர்மறை கருத்துகள் உருவாவதைத் தடுக்க முடியும்,” என்கிறார் திரு காளிதாசன்.

இதற்கான நடைமுறைகளை அறிவியல்பூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறையில் தொடங்கியுள்ள இம்முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3,170 யானைகள் உள்ளன. வனத்துறை கணக்கெடுப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தில் மட்டும் 69 யானைகள் மாண்டுபோயின.

யானைகளுக்கு தற்போது ‘சி 12’, ‘சி 14’ என்பது போன்ற குறியீட்டு எண்களைப் பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சட்ட ரீதியான வழிகாட்டுதல்கள் அடிப்படையில், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்