விஜய் பிரசாரத்தில் விதிமீறல்: ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு

1 mins read
396d3d30-41c0-4d95-a23e-f866bc29cfae
திருச்சியில் செப்டம்பர் 13ஆம் தேதி நடந்த தவெக கூட்டத்தின்போது, அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரும் தொண்டர்களும் காவல்துறையின் விதிமுறைகளை மீறியதாக அவர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

திருச்சி: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் திருச்சியில் இந்த மாதம் 13ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டபோது த.வெ.க. நிர்வாகிகள் ஐந்து பேர் காவல்துறையின் விதிகளை மீறியதாக அவர்கள்மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் விஜய்யின் பொதுக்கூட்டப் பிரசாரம் தொடங்கப்பட்டது. இதற்காகத் திருச்சி மாநகரக் காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்து, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தது.

ஆனால், காவல்துறையின் விதிமுறைகளைத் தவெக நிர்வாகிகளும் கட்சித் தொண்டர்களும் பின்பற்றவில்லை. மேலும், தனியார், அரசு பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தி இருந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, திருச்சி தவெக தெற்கு மாவட்டத் தலைவர் கரிகாலன், மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஆதித்திய சோழன், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இமய தமிழன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் விக்னேஷ்குமார், மகளிர் அணி மாவட்டத் தலைவர் துளசிமணி மற்றும் சிலர் மீது பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகத் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொது இடத்தில் எரிச்சலூட்டும் வகையில் செயல்பட்டது, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அனுமதியின்றி பதாகை வைத்ததாக திருவரங்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்