மதுரை: தொடர் மழை காரணமாக, வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் முழுக் கொள்ளளவு 71 அடியாகும். அந்த அணை நடப்பு ஆண்டில் ஏழாவது முறையாக நிரம்பியுள்ளது. அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளதால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வருஷநாடு மலைப்பகுதியில் மூன்று நாள்களாக மழை நீடித்து வருவதால், வைகை ஆற்றின் தொடக்கப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழைக்காலங்களின்போது வருஷநாடு மலைப்பகுதியில் பல சிற்றாறுகள் உருவாகின்றன. அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து வைகை ஆறாக மாறுவது வழக்கம். பின்னர் பல்வேறு பகுதிகளில் பாய்ந்தோடி, இறுதியில் குன்னூர் வழியாக வைகை அணையைச் சென்றடைகிறது.
வைகை ஆற்றில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) முதல் 3,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் திங்கட்கிழமையன்று மதுரை வந்தடைந்தது.
இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அது சீராக அதிகரித்து வருகிறது. வைகை ஆறு பாய்ந்து வரும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நீர்நிலைகளுக்கு அருகே கால்நடைகளை நடமாடவிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், தேவையின்றி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
தீபாவளிப் பண்டிகையையொட்டி நான்கு நாள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களும் இளையர்களும் ஆற்றில் இறங்கி குளிப்பது ஆபத்தான செயல் என்று காவல்துறை தெரிவித்தது.
இதனிடையே, கனமழை நீடித்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியுள்ளது. செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) மாலை 4 மணி முதல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ‘களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு மக்களைக் காக்க வேண்டும்’ என்று அவர் அறிவுறுத்தினார்.