பெரம்பலூர்: மதுரையில் நடைபெற்ற தவெக மாநில மாநாட்டின்போது, விஜய்யின் பாதுகாவலர் ஒருவர், தொண்டர் ஒருவரை மேடையிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக அவர் மீது முதல் குற்றவழக்கு பதிவாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில், லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மாநாட்டின் மேடையை நோக்கி கட்சித் தலைவர் விஜய், தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடியே நடந்து (ரேம்ப் வாக்) சென்றார்.
அப்போது அவரை நெருங்கி கைகுலுக்கவும் மாலைபோட்டு வாழ்த்து கூறவும் தொண்டர்கள் முண்டியடித்தனர். ஒருசிலர் ‘ரேம்ப் வாக்’ மேடை மீது ஏறிவிட்டனர். அப்போது விஜய்யை நெருங்க முயன்ற சரத்குமார் என்ற தொண்டரை பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கி வீசினர்.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, விஜய், தவெக நிர்வாகிகள் குறித்து கடும் விமர்சனங்கள் வெளியாயின.
இதையடுத்து, தொண்டர் சரத்குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், விஜய், பத்து பாதுகாவலர்கள் மீது காவல்துறை மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதான் விஜய் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் குற்ற வழக்காகும். இதில் அவரது பெயர் முதன்மைக் குற்றவாளி (ஏ1) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.