ரசிகரைத் தூக்கி வீசிய விவகாரம்: விஜய் மீதான வழக்கு மதுரைக்கு மாற்றம்

2 mins read
938589af-8dd2-47bb-b354-3c1308afcc0c
தவெக தொண்டர் சரத்குமாரும் அவரது தாயார் சந்தோசமும் பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய் மீதும் அவரது காவலர்கள் மீதும் புகார் அளித்துள்ளனர். - கோப்புப்படம்: ஊடகம்

மதுரை: மதுரை பாரப்பத்தியில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய்யைப் பார்க்க லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் விஜய் நடந்துசென்றபோது, தொண்டர்கள் சிலர் அங்கிருந்த தடுப்புகளைத் தாண்டி நடை மேடையில் ஏறினர். அப்போது விஜய்க்குப் பாதுகாப்பாக வந்திருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை மேடையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

விஜய்யை அருகில் சென்று பார்க்க முயன்ற பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கி கீழே வீசினர்.

ரசிகர் சரத்குமாரைத் தூக்கி எறியும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில் தவெக தொண்டர் சரத்குமாரும் அவரது தாயார் சந்தோசமும் இருவரும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி.பாலமுருகனிடம் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரில், “தலைவரைப் பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் நான் ஏறினேன். அப்போது என்னை நோக்கித் தாக்கும் நோக்கத்தில் கிட்டத்தட்ட 10 பவுன்சர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி ஓடி வந்தார்கள். அதில் ஒருவர் என்னைக் கீழே இறங்குமாறு அசிங்கமான வார்த்தையால் திட்டியும், மற்றொரு பவுன்சர் இடித்துத் தள்ளியும் தாக்கிக் கீழே வீசினார்.

“என்னைத் தூக்கி கீழே வீசியதில் எனக்கு நெஞ்சுப் பகுதி மற்றும் உடலில் உள்காயம் ஏற்பட்டது. உடலில் எனக்கு இன்னும் வலி அதிகமாக உள்ளது. தவெக பொறுப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினர். ஆனால் முதல் உதவி சிகிச்சைக்குக் கூட உதவி செய்ய யாரும் வரவில்லை. இது போன்று வேறு யாருக்கும் நடைபெறக்கூடாது,” என்பதால் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறேன்.

“தவெக தலைவர் விஜய்யின் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டு மார்பு, நெஞ்சுவலியால் தவித்து வருகிறேன். எனவே தலைவர் விஜய் மீதும், அவர் பாதுகாப்பு பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து குன்னம் காவல்நிலையத்தில் விஜய் மற்றும் பவுன்சர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் மற்றும் அவரது தனிப்பட்ட காவலர்கள்மீது இந்த வழக்கு குன்னம் காவல் நிலையத்திலிருந்து மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்த விசாரணை விரைவில் தொடங்கும் என அந்தக் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்