தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் கே.என். நேரு மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு; தமிழக அரசியலில் பரபரப்பு

2 mins read
1a93cf05-5919-47a4-98ea-ed0faa995250
திமுக அமைச்சர் கே.என். நேரு. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: அரசுப் பணி நியமனத்திற்கு தலா ரூ.35 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் திமுக அமைச்சர் கே.என். நேருவைக் குறிவைத்து அமலாக்கத்துறை செயல்படுவதா தெரிகிறது. இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

அமைச்சர் கே.என்.நேருவின் துறையான நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பணியிட நியமனங்களில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை, ஆதாரங்களுடன் தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

நகராட்சி நிர்வாகப் பணியிடங்களுக்கு தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை ஹவாலா முறையில் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது.

அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 8 அன்று அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் நடத்தும் ஒரு நிறுவனத்தின் அலுவலகங்கள், வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது.

அவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 30 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்த வழக்கில் தேடுதல் நடத்தியபோது, வேலைவாய்ப்பு மோசடியைச் சுட்டிக்காட்டும் முக்கியமான ஆவணங்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

2,538 பணியிடங்களில் 150க்கும் மேற்பட்டோர் முறைகேடாக நியமனம் பெற்றதாகவும் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே சிலருக்குப் பணி உறுதிசெய்யப்பட்டதற்கான உரையாடல் பதிவுகள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லஞ்சத் தொகை ஹவாலா கும்பல் மூலம் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்குப் பரிமாறப்பட்டதாகவும் கூறுகிறது.

இந்த மோசடி குறித்து உடனடியாக முதற்கட்ட விசாரணையைப்திவு செய்யுமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு 232 பக்க விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்துள்ள அமைச்சர் கே.என். நேரு, “இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசுக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்கிறது அமலாக்கத்துறை,” என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், நியமனங்கள் வெளிப்படையாகவும் முறையாகவும் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்