தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் ஆணையத்தின் சதி: ஸ்டாலின் கண்டனம்

2 mins read
0943f7a5-7d2e-4b86-bc66-4409805df8e9
மு.க. ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடவடிக்கையானது, மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாஜவுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

திருத்தப்பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து போராடி தமிழகம் வெல்லும்,” என்று திரு ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அறிவிப்புக்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதன்மை எதிர்க்கட்சியான அதிமுக இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது.

“வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணியை எதிர்த்து தமிழகம் போர்க்களமாக மாறும் சூழ்நிலை உருவாகும். இதனை தமிழகத்தில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையும் ஏற்படும்,” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது என்றும் அப்பட்டியலில் உள்ள அனைத்து குளறுபடிகளையும் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்க உள்ள தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கணக்கெடுப்புக்கு முந்தைய நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும் அந்த ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, திங்கட்கிழமை (அக்டோபர் 27) இரவு முதல் திருத்தப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் முடக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இறுதி வாக்காளர் பட்டியலானது கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி வெளியானது. அப்போது மாநிலத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் இருந்தனர்.

திருத்தப்பணி முழுமையடைந்ததும் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு, பிப்ரவரி 7ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு இந்திய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்மையில் பீகாரில் நடைபெற்ற திருத்தப்பணியின்போது ஏறக்குறைய 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி சாடியது.

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்படுகிறது என ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி இருந்தார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அடுத்த வாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்