தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் கூட்டணிக் குழப்பங்கள்: தடுமாறும் கட்சிகள்

2 mins read
f47df10e-a36a-458b-84e8-52b97a4b2fcb
ராம்தாஸ், செல்வப் பெருந்தகை இருவரும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசியிருக்க வாய்ப்புள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம்: ஊடகம்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகளில் குழப்பம் நிலவி வருகிறது.

தற்போது திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பாமக இடம்பெறும் கூட்டணியில் தங்களால் இடம்பெற இயலாது என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

பாமகவில் உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நேரில் சந்தித்துப் பேசினார்.

இருவரும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசியிருக்க வாய்ப்புள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியை சந்தித்துப் பேசியிருந்தார் செல்வப்பெருந்தகை.

பாமகவின் தலைவர் யார் என்பது தொடர்பாக தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் நேருக்கு நேர் மோதி வருகிறார்கள்.

இதனால் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாமக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பதற்கு தெளிவான விடை தெரியாமல் அக்கட்சி நிர்வாகிகள் தடுமாறுகின்றனர்.

அன்புமணி பாஜக கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சென்று ராமதாசை சந்தித்துள்ளார்.

பாமகவில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு திமுக காரணம் என அன்புமணி அண்மையில் சாடியிருந்தார். ஆனால் ராமதாஸ் அதை மறுத்தார்.

மேலும் ஒரு பேட்டியில், காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதி பாணியில் தனது இறுதி மூச்சு இருக்கும்வரை தாம் மட்டுமே பாமகவின் தலைவர் என்றும் அன்புமணி செயல் தலைவராக மட்டுமே இருப்பார் என்றும் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராமதாஸ்-செல்வப்பெருந்தகை இடையேயான இந்தத் திடீர் சந்திப்பு கூட்டணிக்கான முதல் அச்சாரம் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், திமுக தலைமை மீது மதிமுகவும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அக்கட்சித் தலைமை திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

ஆனால், மதிமுக நிர்வாகிகளும் சிலர் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்துள்ளனர். கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை எப்படி திமுகவில் சேர்க்கலாம் என்று மதிமுக நிர்வாகிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

இதேபோல், அதிமுக கூட்டணியிலும், தேர்தலில் வெற்றி பெற்றால் யாருடைய தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் மறைமுக மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் புதிய அரசாங்கத்தில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா அண்மையில் கூறியுள்ளார்.

அதிமுகதான் ஆட்சி அமைக்கும், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அக்கட்சித் தலைவர்கள் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர்.

மேலும், தனது பேட்டியில் அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார் அமித்ஷா.

அவர் ஏன் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் கூறவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்