மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்துள்ளதாக முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அவர்கள் மூவரும் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு வியாழக்கிழமை (அக்டோபர் 30) நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
அதன்பின் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த மூவரும், “எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் எதிரி. துரோகத்தை வீழ்த்த இணைந்துள்ளோம்,” எனத் தெரிவித்தனர்.
“ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே எங்களது கூட்டணி இருக்கிறது. துரோகத்தின் முகவரியான எடப்பாடி பழனிசாமி மட்டுந்தான் எங்கள் எதிரி. துரோகத்தை வீழ்த்தும் வரையிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஓயாது,” என்று டிடிவி தினகரன் கூறினார்.
அத்துடன், காலதாமதம் காரணமாகச் சசிகலாவால் தங்களுடன் இணைந்துவர இயலவில்லை என்றும் எங்கிருந்தாலும் அவர் தங்களுடன் மனத்தால் இணைந்து இருக்கிறார் என்றும் தினகரன் குறிப்பிட்டார்.
மேலும், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற இருப்பதாகக் கூறிய அவர், தங்களது பணிகள் குறித்து வருங்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்வீர்கள் என்றும் சொன்னார்.
ஓபிஎஸ் பேசுகையில், “பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கவே நாங்கள் சேர்ந்திருக்கிறோம். அதிமுக ஒன்றிணைய வேண்டும், தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று தேவரின் சன்னதியில் சபதம் எடுத்துள்ளோம்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“அதிமுக எங்களுக்கு எதிரி இல்லை. எடப்பாடி பழனிசாமி மட்டுந்தான் எங்கள் எதிரி. அவரை வீழ்த்தும்வரை ஓயமாட்டோம். தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவோம்,” என்றும் அவர் சொன்னார்.
மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓபிஎஸ்ஸும் செங்கோட்டையனும் ஒரே காரில் சென்றனர். பசும்பொன் செல்லும் வழியிலுள்ள அபிராமம் பகுதியிலுள்ள சாலையில் அவர்கள் இருவரும் தினகரனைச் சந்தித்துப் பேசினர். பின்னர் மூவரும் பசும்பொன் சென்று நினைவஞ்சலி செலுத்தினர்.
சற்று நேரத்திற்குப் பின் பசும்பொன் சென்ற சசிசலா, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், ஓபிஎஸ்ஸுடனும் செங்கோட்டையனுடனும் பேசினார்.
கட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றது, அதிமுக மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

