சென்னை: போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு தமிழ்த் திரையுலக நடிகரான கிருஷ்ணாவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவர் ஸ்ரீகாந்தின் நெருங்கிய நண்பர் என்றும் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிப்பதாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துலக கடத்தல் கும்பலிடமிருந்து ‘கொகைன்’ உள்ளிட்ட போதைப்பொருள்களை ஸ்ரீகாந்த் வாங்கியிருக்கலாம் என்று கருதும் காவல்துறை அதிகாரிகள், அந்தக் கோணத்தில் விசாரணையைத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சொகுசு மதுபான விடுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பிரசாத் (33), அஜய் ரோஹன், தூண்டில் ராஜா ஆகியோர் கைதாகினர்.
இவர்களது கைப்பேசிகளை ஆய்வு செய்தபோது, அனைத்துலக கடத்தல் கும்பலுடன் பிரசாத்துக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அந்தக் கும்பலிடம் இருந்து போதைப்பொருள்களை வாங்கி, தனக்குத் தெரிந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலதிபர்கள், திரையுலகத்தினருக்கு அவர் விற்று வந்துள்ளார்.
அவர் அளித்த தகவலின் பேரில், ஓசூர் பகுதியில் பதுங்கியிருந்த கானா நாட்டைச் சேர்ந்த ஜான் (38) என்பவர் உட்பட, இருவர் கைதாகினர்.
இவர்களிடம் இருந்து 11 கிராம் ‘கொகைன்’, ரூ.40,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களிடம் இருந்துதான் பிரசாத், கடந்த ஆறு ஆண்டுகளாகப் போதைப்பொருள்களை வாங்கியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, பிரசாத்திடமும் அவரது கூட்டாளிகளிடமும் காவல்துறை நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையின்போது, நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பாக ஸ்ரீகாந்த்தும் பிரசாத்தும் ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல் பரிமாற்றம் செய்ததும் ஒரு கிராம் கொகைனை ரூ.7,000க்கு வாங்கி, அதை ஸ்ரீகாந்துக்கு ரூ.12,000க்கு பிரசாத் விற்றதும் அம்பலமானது.
இவ்வாறு 40 முறை போதைப்பொருள் வாங்க ரூ.5 லட்சத்தை பணப்பரிமாற்றச் செயலி மூலம் பிரசாத்துக்கு அனுப்பியுள்ளார் ஸ்ரீகாந்த்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 11 கிராம் ‘கொகைன்’ பறிமுதல் செய்யப்பட்டது.
பிரசாத் தயாரித்து வரும் ‘தீக்கிரை’ என்ற திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்த்திடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்துடன் நட்பில் இருந்த நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவர் இயக்குநர் விஷ்ணு வர்த்தனின் சகோதரர் ஆவார்.
மேலும், இவரைப் போல் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த வேறு யார், யாருக்கெல்லாம் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது, வேறு யார் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால் திரையுலகத்தினர் மத்தியில் பரபரப்பு நிலவுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.