சென்னை: மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து வெறும் கண்துடைப்புக்காக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கூடாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், பாஜகவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு சமூக அநீதிக்குத் தமிழக அரசு துணை போகக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அனைத்து வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில், கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு நடத்தாமல், அனைத்து சமூகத்துக்கும் உரிய விகிதாச்சார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும்.
“அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்தியுள்ளன. அந்த ஆய்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளன.
“அந்த ஆய்வானது, அனைத்துச் சமூகத்துக்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்,” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செயல்படாமல், மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பாஜகவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக்கூடாது என்றும் அவர் அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.