தேமுதிக ஏற்கெனவே தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுள்ளது: பிரேமலதா

1 mins read
7b26c055-8657-4f9a-8124-296fa7a7436f
பிரேமலதா விஜயகாந்த். - படம்: ஊடகம்

கரூர்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லதுதான் என்றும் அதனால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக கரூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிகமாக உள்ளது என்றும் பிரேமலதா குற்றஞ்சாட்டினார்.

திமுக பொதுக்குழுவில் காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதலளித்த அவர், அது அரசியல் நாகரிகம் என்றார்.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுமா என்று கேட்கப்பட்டபோது, தங்கள் கட்சி ஏற்கெனவே தனித்துப் போட்டியிட்டுள்ளது என்றும் வரும் காலங்களில், தனித்து போட்டியிடுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

“தனித்துப் போட்டியிடுவது பெரிய விஷயமல்ல. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று, பெரிய பலத்துடன் பேரவைக்குச் செல்ல வேண்டும். இதுதான் முக்கியம். தேமுதிக வாக்கு வங்கி குறையவில்லை. அப்படியேதான் உள்ளது.

“விரைவில் நல்லது நடக்கும். அது சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பானவையாக இருக்கும்,” என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

குறிப்புச் சொற்கள்