சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது தொடர்பான சில வழக்குகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகளில் உள்ள கட்டுமானங்களை இடித்து அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள, 11,372 நீர்நிலைகள், மின்னிலக்க முறையில் துல்லியமாக அளவீடு செய்யப்பட்டு, அதன் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை மற்றும் வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
அத்துறையின் வசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில், தமிழகத்தில் 41,948 ஏரிகள் உள்ளதாகவும் ஆக்கிரமிப்பு காரணமாக பல ஏரிகள் இருந்த இடமே தெரியாமல் மாயமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த ஏரிகளின் அடையாளங்களைத் தேட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டம், தாலுகா வாரியாக ஏரிகள் குறித்த செயற்கைக்கோள் வரைபட விபரங்களை வெளியிட வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் நீர்நிலைகளை, டிஜிட்டல் முறையில் நில அளவை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த 2021 மே மாதம் இதற்கான பணிகள் துவங்கின. இதுவரை 14,116 ஏரிகளுக்கான நில அளவை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 11,372 நீர்நிலைகளின் மின்னிலக்க வரைபடங்கள் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது.
மாவட்டம், தாலுகா, கிராமத்தின் பெயரைத் தேர்வு செய்து, அங்குள்ள நீர்நிலைகளின் வரைபடங்களைப் பார்க்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
இதன் மூலம் ஆக்கிரமிப்புகளை எளிதில் அடையாளம் கண்டு அவற்றை அகற்ற முடியும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.