‘வாழ வைக்கிற வாழை தாழவும் வைக்கும்’ என்று சொல்வார்கள்.
இன்றைய காலத்தில் வாழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் விளையும் பழங்களில் உத்திரப் பிரதேச மாம்பழம், தமிழக பன்னீர் திராட்சை, காஷ்மீர் ஆப்பிள், தமிழக வாழைப்பழம் மற்றும் கர்நாடக மாதுளை உள்ளிட்ட சில பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
‘அது கடந்த மாதம், இது இந்த மாதம்’ என்பதுபோல், ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.
அது... தமிழகம், இதர மாநிலங்களில் விளையும் பழங்களில், ஏற்றுமதியில் முதலிடம் பிடித்திருந்தது பன்னீர் திராட்சை.
மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளில் மூன்றாவதாக உள்ள வாழை ஏற்றுமதியில் கடைசி இடம் பிடித்திருந்தது. இப்போது பன்னீர் திராட்சையைப் பின்னுக்குத் தள்ளி ஏற்றுமதியில் முதலிடம் பிடித்திருக்கிறது வாழைப்பழம்.
மத்திய கிழக்கு நாடுகளில் வாழைப்பழம் உண்ணும் விருப்பம் மக்களிடம் அதிகரித்திருப்பதால் முந்தி நிற்கிறது வாழை ஏற்றுமதி.
2023-24 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வாழைப்பழத்தின் இந்திய மதிப்பு ரூ.2,475 கோடி ஆகும். 2024-25 நிதியாண்டில் ரூ.3,210 கோடி.
ஏற்கெனவே ஏற்றுமதியாகிக் கொண்டிருந்ததைவிட, 30% வாழை ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. ஒரே ஆண்டில் சுமார் 725 கோடி ரூபாய்க்கு கூடுதல் ஏற்றுமதியாகி உள்ளது.
‘அந்த வாழைப்பழம்தான் அண்ணே இது’ என்றெல்லாம் எல்லா நாட்டு வாழைப்பழங்களையும் மத்திய கிழக்கு மக்கள் ஏற்பதில்லை. இந்திய வாழைகளுக்கு மட்டுமே மவுசு கூடிவருகிறது.
உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் ஏத்தன் பழம் எனப்படும் கடுக்கரை நேந்திரம் பழம் உலகத்தரம் வாய்ந்தது.
மூட்டு, கால் வலிக்கு நேந்திரம் வாழை மிகுந்த பலன் தரும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே விளையக்கூடிய மட்டிப்பழம் மிகுந்த சத்துடையது.
திண்டுக்கல் சிறுமலை வாழை மருத்துவக் குணம் வாய்ந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் செவ்வாழை, கல்லீரல் வீக்கம், சிறுநீர் தொற்று உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தக் கூடியது என்கிறார்கள் வேளாண் ஆய்வாளர்கள்.
ருசிக்கு ருசி, மருந்துக்கு மருந்து என இரு மாறுபட்ட தனித்துவம் கொண்ட வாழைப்பழம் மிகச் சிறந்த பசியாற்றி எனலாம்.
வாழையில் புரதச்சத்து, நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள சர்க்கரை அதை உண்ட உடனேயே உற்சாகம் தருகிறது.
நார்ச்சத்து மலமிலக்கியாக செயல்படுகிறது. பொட்டாசியம் இதய ஆரோக்கியம் தருகிறது.
இப்படிப் பலவித நன்மைகள் வாழைப்பழத்தில் இருப்பதால் உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் வாழையை விரும்பி உண்கிறார்கள்.
அதுவும், இந்தக் கால பீட்ஸா உணவுகளால் உண்டாகும் மலச்சிக்கலைத் தீர்க்க வாழைப்பழத்தை மக்கள் அதிகமாக நாடத் தொடங்கியுள்ளனர்.
வாழை உற்பத்தியில் தமிழகம் முதலிடம்
இந்தியாவில் வாழை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
உலகின் வாழைப்பழத் தேவையில் சுமார் 20 விழுக்காட்டை இந்தியா ஈடுகட்டுகிறது.
வாழை உற்பத்தியை மேலும் ஊக்குவிக்க திருச்சியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் ‘தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம்’ செயல்பட்டு வருகிறது.
இப்போது சுமார் ஐந்து லட்சம் ஹெக்டேரில் வாழை விளைவிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்டுதோறும் 115 மில்லியன் டன் வாழை உற்பத்தி நடக்கிறது.
இந்தியாவில் 30 மில்லியன் டன் விளைவிக்கப்படுகிறது. இதில் தமிழகம் 15% உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது.
ஆண்டுக்கு 5,150 மெட்ரிக் டன் வாழைப்பழத்தை தமிழகம் விளைவிக்கிறது.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் சதைப் பகுதி இருக்க, அதன் தோல் பகுதியைச் சாப்பிடுவார் நடிகர் நாகேஷ்.
இப்போது... வாழைப்பழத் தோலிலும் ஊட்டச்சத்துகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்படி வாழையின் இதுபோன்ற மகிமைகளால் அதன் மவுசு கூடிக்கொண்டே வருகிறது.
உலகின் வாழைப்பழத் தாகத்தைத் தணிப்பதில் முக்கிய இடம் வகிப்பது தமிழ்நாட்டுக்குப் பெருமை.
வாழைப்பழத்தை ‘அறிவாளிகளின் பழம்’ என்று சொல்வார்கள்.
‘மலச்சிக்கல்’ என்பது மனச்சிக்கலுக்கு வழிவகுக்கும். அதனால்தான், ‘குடல் சுத்தமே உடல் சுத்தம்’ எனப்படுகிறது.
குடலைச் சுத்தப்படுத்துவதால்தான் வாழைப்பழம் உண்பதை அறிவார்ந்த செயலாகச் சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.
இப்படிப் பல வகையிலும் நம்மை வாழ வைக்கும் வாழைப் பழத்தை பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் விரும்பிச் சாப்பிடுவதில் வியப்பில்லை.
சுவைத் தகவல்கள்: மங்கலத்தின் குறியீடு
எத்தனையோ பழங்கள் இருந்தாலும், கோவில், பக்தி, திருமணம், சடங்கு, மங்கல விழாக்கள் என அனைத்து மங்கல நிகழ்வுகளிலும் இடம்பெறும் பழம் வாழைப்பழம்தான்.
அதிலும், தமிழர்களின் கலாசாரத்துடன் சம்பிரதாயங்களுடன் ஒன்றிணைந்திருக்கிறது வாழைப்பழம்.
‘பனானா’ - பெயர்க் காரணம்
போர்த்துக்கீசிய மொழியில் ‘பனானா’ என்றால் விரல் என்று அர்த்தம்.
முன்பு வாழைப்பழம் விரல் அளவிலேயே விளைந்திருக்கிறது. அதனால்தான் வாழைப்பழத்திற்கு ‘பனானா’ என ஆங்கிலப் பெயர் வந்தது.
ஆப்பிரிக்க மொழியில் உள்ள ‘வொலோஃப்’ என்ற சொல்தான் ‘வாழை’ என ஆகியதாகக் கூறப்படுகிறது. ஆனால் தமிழக விவசாயிகளோ, வாழையடி வாழையாக வாழ வைப்பதால் அதன் பெயர் ‘வாழை’ எனப் பொருத்தமான விளக்கம் தருகிறார்கள்.
விரல் அளவும் கையளவும்
ஆசிய கண்டத்தில்தான் வாழை முதன்முதலில் உருவானது. அதன் பிறகே பிற நாடுகளுக்குப் பரவியது. கிமு 327ல் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அலெக்ஸாண்டர், வாழையை விரும்பி உண்டதுடன், கிரேக்கத்திற்கு வாழை வேளாண்மையை அறிமுகப்படுத்தினார்.