கடலூர்: கடலூர் தனியார் பள்ளிக்கூட வேன் ஒன்று செவ்வாய்க்கிழமை (8.7.2025) காலையில் நான்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன், கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராதவிதமாக பள்ளி வேனில் மோதியது.
இந்த விபத்தில் பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்தது. இதில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையைச் சேர்ந்த செழியன்(15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்றவர்களில் சின்னகாட்டுசாகையைச் சேர்ந்த செழியன் (15) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு மூன்றாக அதிகரித்துள்ளது. இந்த விபத்து கடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் சாலைக்கான ரயில்வே கதவுகள் திறந்திருந்ததன் காரணமாக அந்த வாகனம் தண்டவாளத்தைக் கடந்ததாகவும், அப்போது அவ்வழியே திடீரென வந்த ரயில், பள்ளி வேன் மீது மோதித் தள்ளியதாகவும் கூறப்படுகிறது. ரயில் வரும் அந்த நேரத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் வழியின் கதவுகளை மூடி வைக்காமல் திறந்து வைத்திருந்ததாலேயே இந்த விபத்து நடந்தது என்று கூறப்படுகிறது.
ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவில் தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்தது. இந்தப் பள்ளி வேனில் குறைந்த அளவே மாணவர்கள் இருந்ததால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் சந்திப்பில் பணியில் இருந்த ‘கேட் கீப்பர்’ பங்கஜ் சர்மா, 32,என்பவரை ரயில்வே துறை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து ‘கேட்கீப்பர்’ தூங்கிவிட்டதால் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, ரயில் வரும் நேரத்தில் கேட்கீப்பர் கேட்டை மூடாததால், அந்த வேன், ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்தத் தகவலை ரயில்வே துறை மறுத்துள்ளது.

