தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு விரிசல்

1 mins read
0760e169-7bce-4b71-a9c1-da9b166e1b37
இந்தச் சாலைப்பணி எதிர்பார்த்த தரத்தில் அமையவில்லை எனப் பல்வேறு தரப்பினரும் புகார் எழுப்பியுள்ளனர். - படம்: ஊடகம்

திருவள்ளூர்: சென்னையில் இருந்து திருப்பதி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ஏற்பட்டுள்ள திடீர் விரிசலைக் கண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை பாடி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா வரை நான்கு வழிச்சாலையாக 124 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வந்தது.

திருவள்ளூர் முதல் திருநின்றவூர் வரையிலான 17.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி ஏறக்குறைய 80% முடிந்துவிட்டது.

ஏரிகள், சாலைகள் குறுக்கிடும் இடங்களில் ஏழு மேம்பாலங்களும் பத்து சிறு பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.

எனினும், இந்தச் சாலைப்பணி எதிர்பார்த்த தரத்தில் அமையவில்லை எனப் பல்வேறு தரப்பினரும் புகார் எழுப்பியுள்ளனர்.

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வரும் முன்பே, பல இடங்களில் தார் பெயர்ந்து சாலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் கூடிய தகவலைப் பகிர்ந்து வருகிறார்கள்.

சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பக்கவாட்டுச் சுவர்களில் மண் அரிப்பும் ஏற்பட்டு உள்ளது என்றும் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மண் மொத்தமாக உள்வாங்கியதால் பாலத்திற்கும் சாலைக்கும் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையோரங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன.

எனவே, அதிகாரிகள் இந்தச் சாலையை முழுமையாக ஆய்வு செய்து பணிகளை விரிவுபடுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்