சென்னை: சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியாக தானியங்கிக் குடிநீர் இயந்திரங்களை (ஏடிஎம்) முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
மக்கள் அதிகம் கூடும் ஐம்பது இடங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்களைச் சென்னை மாநகராட்சியின் குடிநீர் வடிகால் வாரியம் நிறுவி உள்ளது.
கடற்கரை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள் போன்ற பகுதிகள் அவற்றில் அடங்கும்.
அந்த ஐம்பது இயந்திரங்களின் மதிப்பு 6.04 கோடி ரூபாய் என்று வாரியம் தெரிவித்து உள்ளது.
அவற்றைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நிகழ்வு புதன்கிழமை (ஜூன் 18) சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
காலை 10 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்தத் தானியங்கிக் குடிநீர் இயந்திரம் ஒன்றைத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வில் இருந்தவாறே பிற இடங்களில் உள்ள இயந்திரங்களையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அவர் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இந்த ஏடிஎம் இயந்திரங்களில் 1.50 லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் என்ற இரு அளவுகளில் குடிநீர் பெற்றுக்கொள்ள முடியும். அதற்குக் கட்டணம் இல்லை.
மேலும் இந்தக் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடியவை.