திரைப்பட விமர்சனங்களுக்குத் தடை விதிக்க இயலாது: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

திரைப்பட விமர்சனங்களுக்குத் தடை விதிக்க இயலாது: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

2 mins read
904a97a3-9c9f-4392-8eb8-0e383c06d753
சமூக ஊடகத் தளங்களில் புதிய திரைப்படங்களின் தரத்தை மதிப்பாய்வு செய்து காணொளி வெளியிடுவது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் தந்துள்ள அடிப்படை உரிமை என்றார் நீதிபதி. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: புதிதாக வெளியாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோருவது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோடிக்கணக்கில் செலவு செய்து, பலரது உழைப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு எழும் நேரடி, மறைமுக விமர்சனங்களால் அந்தப் படங்கள் தோல்வியடைந்து நஷ்டத்தைச் சந்திப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய போக்கால் திரைத்துறையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதைத் தவிர்க்க திரையரங்குகளில் புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களை, அவை வெளியீடு கண்ட முதல் மூன்று நாள்களுக்கு யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என தடை விதிக்கவும் அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நீதித்துறை குறித்தும், சில நேரங்களில் நீதிபதிகளைப் பற்றியும்கூட பொதுமக்கள் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களின் தாக்கம் பட்டி, தொட்டியெங்கும் பரவியுள்ள இக்காலகட்டத்தில் மக்கள் யாரையும் விட்டு வைப்பது இல்லை என்றும் தன்னைப் பற்றியும்கூட சிலர் விமர்சிக்கிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

“இந்த விமர்சனங்களை எல்லாம் தடுக்க முடியாது. இவை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை.

“யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ் ஆகிய தளங்களில் புதிய திரைப்படங்களின் தரத்தை மதிப்பாய்வு செய்து காணொளி வெளியிடுவது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் தந்துள்ள அடிப்படை உரிமை.

“சில நேரங்களில் எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“நீதிமன்ற உத்தரவு மூலமாக இதுபோன்ற விமர்சனங்களை முன்கூட்டியே முடக்கிவிடலாம் எனக் கருதுவது பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது,” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்.

குறிப்புச் சொற்கள்