தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் மீது பாஜகவுக்கு போலிப் பாசம்: சாடும் ஸ்டாலின்

2 mins read
6b18b6cd-7685-4c42-beea-419e4e1a7eb8
முதல்வர் ஸ்டாலின், செல்வப் பெருந்தகை. - படங்கள்: ஊடகம்

சென்னை: கடந்த பத்து ஆண்டுகளில், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, ரூ.2,533.59 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, மற்ற மொழிகளுக்கு மிகக் குறைவான தொகையே ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மற்ற ஐந்து இந்திய செம்மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா, மலையாளம் ஆகிய மொழிகளுக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் ரூ.147.56 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது என்றும் அவர் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமஸ்கிருதத்தை விடவும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு 22 மடங்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த ஐந்து மொழிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு, பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பாக மேலும் சில தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு தேர்தல் நேரத்து வாக்குகளுக்காக மட்டும்தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு மட்டும்தான். இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி,” என்று சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் முக்கியமான மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிப்பதாகவும் செம்மொழி தகுதி பெற்ற அனைத்து மொழிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்துவதாகவும் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்