தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2026 பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் கல்லூரி செயல்படும்

2 mins read
3825aa14-1a15-4132-a90b-fdbd2c6f1f05
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் மாதிரிப் படம். - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 2

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 தைப்பொங்கல் முதல் செயல்படத் தொடங்கும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான அனுமந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான நான்காவது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றுவிட்டது என்றும் அம்மாணவர்கள் தற்போது ராமநாதபுரத்தில் படித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

“தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடப் பணிகள் தோப்பூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் நிறைவடையும் தறுவாயில் இருப்பதால், வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைப்பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்.

“2027ம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று செயல்படத் தொடங்கும். மாதந்தோறும் கட்டடப் பணிகள் குறித்த புகைப்படங்களை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன,” என்றார் அனுமந்த ராவ்.

அவரது இந்த அறிவிப்பானது, மதுரை மக்களுக்கு மட்டுமல்லாமல், மருத்துவ மாணவர்களுக்கும் உற்சாகம் அளித்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையும் கல்லூரியும் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை எனப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையி்ல், 218,927 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவக் கல்லுாரி, விடுதிக் கட்டடங்கள், ஆசிரியர் குடியிருப்புகள், மாணவ, மாணவியர்க்கான தனி விடுதிகள், உணவகம், விளையாட்டுக்கூடம் போன்ற கட்டுமானங்களை 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுப் பணிகள் தொடங்கின.

இதற்கான பணிகள் மதுரை தோப்பூரில் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வந்தன.

ரூ.2021.51 கோடி திட்ட மதிப்பீட்டீல் நடைபெறும் பணிகளில் ஏறக்குறைய 50% பணிகள் முடிந்துள்ளதாக அனுமந்த ராவ் தெரிவித்தார்.

அண்மையில், மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் கட்டடங்கள் அமைய உள்ள முப்பரிமாண மாதிரி வடிவமைப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்