தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுகவுடனான கொள்கைக் கூட்டணி ஒருபோதும் உடையாது: முத்தரசன்

1 mins read
4bebcc56-ba1b-46bd-88d5-3a1289fdeda9
முத்தரசன். - படம்: ஊடகம்

சேலம்: திமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியானது, கொள்கை ரீதியான கூட்டணி என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் எந்தக் கூட்டணியும் இவ்வளவு நாள் நீடித்தது கிடையாது என்றும் திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது என்றும் அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

“இது தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல, கொள்கைக்காக அமைந்த கூட்டணி. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களை வெற்றிகரமாக சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்.

“திமுக கூட்டணி உடைந்து பாஜக அணியில் சில கட்சிகள் இணையும் என சிலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அது நடக்கப்போவதில்லை,” என்றார் முத்தரசன்.

முருகனை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்ததாகக் குறிப்பிட்ட அவர், நெருக்கடி, நிர்ப்பந்தம் காரணமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

“முருகன் மாநாட்டை நடத்தியிருப்பதால் பாஜக தமிழகத்தில் வெற்றிபெற முடியாது. அதிமுக மடியில் கனம் இருந்ததால் பாஜகவின் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது,” என்றார் முத்தரசன்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்வரும் தேர்தலில் தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனத் திமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதேபோல் மதிமுகவும் கூடுதல் தொகுதி ஒதுக்கக் கேட்டுள்ளது.

எனவே, திமுக கூட்டணி உடைந்துபோக வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். எனினும், இந்தக் கூற்று தவறானது என்று கூறி, முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முத்தரசன்.

குறிப்புச் சொற்கள்