தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பாஜகவின் கிளைக் கழகம்போல் அதிமுக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு

திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ

2 mins read
94e74d15-ff49-48e3-ab65-59a705b58083
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மனோஜ் பாண்டியன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற பி.எச். மனோஜ் பாண்டியன் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு எடப்பாடி பழனிசாமி அணி, ஓ. பன்னீர்செல்வம் என இரு அணிகளாகப் பிளவுற்றது. போதாக்குறைக்கு, டிடிவி தினகரனும் அமமுக எனத் தனிக்கட்சி தொடங்கி, அதிமுக ஆதரவாளர்களைத் தன்பக்கம் ஈர்த்தார்.

அண்மையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கைகோத்தனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்படும் மனோஜ் பாண்டியனும் அதிமுகவைவிட்டு வெளியேறியுள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் சேர்ந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், “திராவிடக் கொள்கைகளை பின்பற்றும் இயக்கமான திமுகவில் இணைந்துள்ளேன்; தமிழக உரிமைகளை அடகுவைக்காத தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தொண்டர்களின் உழைப்பை அங்கீகரிக்காதவர் எடப்பாடி பழனிசாமி.

“பாஜகவுடன் எந்தவொரு காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தற்போது எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை. அதுகுறித்து இன்று வரை பதில் இல்லை.

“எந்தக் கொள்கைக்காக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டதோ, அது காற்றில் விடப்பட்டுள்ளது. அதிமுகவை தோற்றுவித்த தலைவரும், அதற்குப் பின்னால் அந்த இயக்கத்தை பாதுகாத்து வளர்த்த ஜெயலலிதாவும் எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவை யாருக்கும் அடகுவைக்கவில்லை.

“அவர்கள் காலத்தில் இருந்த அதிமுக தற்போது இல்லை. இன்றைய அதிமுக என்பது வேறு. மற்ற இயக்கத்தை நம்பி, அவர்களின் சொற்படி நடக்கிறது. பாஜகவின் கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகிறது.

“இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை எம்எல்ஏ பதவியிலிருந்து விலகவிருக்கிறேன்,” என்று சொன்னார்.

இந்நிலையில், மனோஜ் பாண்டியன் தன்மானத்தை அடகுவைத்துவிட்டு திமுகவில் சேர்ந்திருப்பதாக அதிமுகவின் வைகைச் செல்வன் சாடியிருக்கிறார்.

“எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. மனோஜ் பாண்டியனை எம்.பி. ஆக்கியவர் ஜெயலலிதா. தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இதெல்லாம் யாரால் வந்தது என்ற நன்றி மறந்து, பஞ்சம் பிழைக்க திமுகவிற்குப் போயிருக்கிறார்,” என்று வைகைச் செல்வன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்