தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 77 ஆயிரம் பேர்

2 mins read
bbb4c3cd-044e-427a-b094-dc5a7e457abd
அர்ச்சனா பட்நாயக். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளில் 77 ஆயிரம் பேர் பணிபுரிவர் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அக்டோபர் இறுதி வாரம் முதல் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெற உள்ள இச்சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரை 77 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுவர்.

“அவர்களுக்கு வீடு வீடாக கணக்கெடுப்பு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, உரிமை கோரல்கள், மறுப்புரைகள் ஆகியவற்றை கையாளும் முறைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமைகள், பொறுப்புகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில் 38 மாவட்டத் தேர்தல் அதிகாரிகளும் 234 வாக்காளர் பதிவு அலுவலர்களும் 624 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுவர் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலக மேற்பார்வையாளர்கள், 68,472 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பங்களிப்பும் இருக்கும் என மேற்குறிப்பிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

தன்னார்வலர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகளால் இந்தப் பயிற்சி நடத்தப்படும் என்று அறிக்கை மேலும் கூறுகிறது.

இதற்கிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையைத் தள்ளிவைக்க வேண்டும் என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன.

சென்னையில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

குறிப்புச் சொற்கள்