சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்த விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என 306 பேருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சிபிஐ அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோரால் கண்காணிக்கப்படுகிறது.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் அதிகாரிகள் துல்லியமாக ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள், கடைகள் வைத்திருப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
கூட்டத்துக்கு அனுமதி வழங்கிய கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் சிபிஐ குழு ஒன்று விசாரணை நடத்தியதாகவும் இரண்டு மணிநேரத்துக்கு அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்ட நெரிசலின்போது உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தார், அவர்களைத் தவெக கூட்டத்துக்கு அழைத்துச் சென்ற அக்கட்சியினர் என்று முதற்கட்டமாக மொத்தம் 306 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, அனைவரும் நேரில் முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், திங்கட்கிழமை (நவம்பர் 3) சென்னை பனையூரில் தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

