உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்காட்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், ஆஸ்திரியா

2 mins read
9ee19ef0-8308-44a7-8f29-3de28c0c2000
கோல் போட்டுக் கொண்டாடிய ஸ்காட்லாந்தின் ரயன் கிறிஸ்டி. - படம்: ராய்ட்டர்ஸ்

கிளாஸ்கோ: மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் ஸ்காட்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், ஆஸ்திரியா ஆகிய குழுக்களும் அப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

1998ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஸ்காட்லாந்து களமிறங்கியது.

அதன்பிறகு, இப்போதுதான் அது அப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தகுதிச் சுற்று ஆட்டத்தில் டென்மார்க்கை 4-2 எனும் கோல் கணக்கில் ஸ்காட்லாந்து தோற்கடித்தது.

வெறும் பத்து ஆட்டக்காரர்களுடன் விளையாடிய டென்மார்க், ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் இரண்டாவது முறையாக ஆட்டத்தைச் சமப்படுத்தியது.

இதன்மூலம் அது ஒரு புள்ளி பெற்று ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்து உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 90 நிமிடங்களுக்குப் பிறகு, காயம் மற்றும் இதர தாமதங்களை ஈடு செய்வதற்காக ஆட்டம் தொடரப்பட்டது. அப்போது ஸ்காட்லாந்து இரண்டு கோல்களைப் போட்டு வெற்றி பெற்றது.

மற்றோர் ஆட்டத்தில் ஸ்பெயினும் துருக்கியும் தரப்புக்கு இரு கோல்கள் போட்டு சமநிலை கண்டன.

இதன்மூலம் ‘இ’ பிரிவில் ஸ்பெயின் முதலிடம் பிடித்து உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இரண்டாவது இடம் பிடித்த துருக்கி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

லைச்ட்சன்ஸ்டைனுக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் கோல் மழை பொழிந்து உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பிடித்தது.

7-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடிய பெல்ஜியம், 18 புள்ளிகளுடன் ‘ஜே’ பிரிவில் முதலிடம் பிடித்தது.

தகுதிச் சுற்றில் அது ஓர் ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றோர் ஆட்டத்தில் ஆஸ்திரியாவும் போஸ்னியா அண்ட் ஹெர்சோகோவினாவும் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.

ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் ஆஸ்திரியா கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.

1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் ஆஸ்திரியா உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்