அனைத்துலக பெண்கள் வலைப்பந்து போட்டியான சிங்லைப் நேஷன்ஸ் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி தோல்வியடைந்தது.
சனிக்கிழமை (நவம்பர் 8) பிற்பகல் ஓசிபிசி அரங்கில் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் 54-42 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் தோல்வியடைந்தது. கடந்த ஆண்டும் கென்யாவுக்கு எதிராக எதிராக ஆடிய ஆட்டத்தில் சிங்கப்பூர் தோல்வியைச் சந்தித்தது.
மலேசியா தோல்வி
மூன்றாவது இடத்திற்கு நடந்த ஆட்டத்தில் மலேசியாவும் பாப்புவா நியூ கினியும் மோதின. இந்த ஆட்டத்தில் 69-54 என்ற புள்ளிக் கணக்கில் பாப்புவா நியூ கினி வெற்றிபெற்றது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் அபார வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் 68-39 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
கிட்டத்தட்ட ஒரு வாரம் நடந்த நேஷன்ஸ் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூருடன் கென்யா, மலேசியா, ஐல் ஆஃப் மேன், பாப்புவா நியூ கினி ஆகியவற்றின் அணிகளும் கலந்துகொண்டன.
தற்போது வலைப்பந்து தரவரிசையில் 22ஆம் இடத்தில் உள்ள சிங்கப்பூர் அணிக்கு இந்தப் போட்டி நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் தாய்லாந்தில் நடக்கவுள்ளன. தற்போது நடந்து முடிந்த போட்டி சிங்கப்பூர் வீராங்கனைகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர் நம்பிக்கை
சிங்கப்பூர் பெண்கள் அணி இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு நடந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு பிறகு நடந்த போட்டிகளில் தங்கம் வெல்ல சிங்கப்பூர் தவறியது.
தொடர்புடைய செய்திகள்
2017, 2019ஆம் ஆண்டு நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் மலேசியாவிடம் தங்கத்தை பறிகொடுத்தது சிங்கப்பூர். 2022, 2023 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வலைப்பந்து இடம்பெறவில்லை.
“கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பை நாம் வென்றோம், அதனால் இம்முறை தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது,” என்று பயிற்றுவிப்பாளர் தாரா ஸ்டீல் தெரிவித்தார்.

