சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் (லயன்ஸ்) பயிற்றுவிப்பாளர் சுமோத்து ஒகுரா பதவி விலகுகிறார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக சிங்கப்பூர் அணிக்குப் புதிய பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஒகுரா பதவி விலக முடிவெடுத்துள்ளார் என்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஒகுரா, சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் லயன்ஸ் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். ஈராண்டுகளுக்கான ஒப்பந்தம் அவருக்கு வழங்கப்பட்டது.
முன்னாள் பிஜி தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் பயிற்றுவிப்பாளரான கேவின் லீ, லயன்ஸ் அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிரந்தரப் பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணிகள் நடந்துவருகின்றன.
தான் பதவி விலகப்போவதாக எடுத்துள்ள முடிவை ஒகுரா பல வாரங்களுக்கு முன்பே தங்களிடம் தெரியப்படுத்தியதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் தெரிவித்தது. தனிப்பட்ட விவகாரங்களைக் கவனிக்க அவர் தனது சொந்த நாட்டுக்குப் போகவேண்டியிருப்பது காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகுராவின் முடிவைத் தாங்கள் மதிப்பதாகவும் அவரின் சிறந்த தொழில் நடத்தை (professionalism), கடமை உணர்வு, சிங்கப்பூர் காற்பந்துக்கு அவரின் பங்களிப்பு ஆகியவற்றை மனமாரப் பாராட்டுவதாகவும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் சொன்னது.