தோக்கியோ: வடகொரியா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, அடுத்த ஆண்டு நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வடகொரிய விளையாட்டு வீரர்களை பங்கேற்க அனுமதிப்பது குறித்து ஜப்பான் பரிசீலிக்கும் என்று ஜப்பானிய அரசாங்கம் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) தெரிவித்துள்ளது.
அந்த இரு அண்டை நாடுகளுக்கு இடையே எந்த அரசதந்திர உறவும் இல்லை. மேலும் 1994ஆம் ஆண்டு ஜப்பான் கடைசியாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியபோது வடகொரியா பங்கேற்கவில்லை.
வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை விவகாரங்கள் காரணமாக 2016 முதல் அந்நாட்டுக் குடிமக்கள் தனது நாட்டிற்குள் நுழைவதற்கு ஜப்பான் தடை விதித்துள்ளது. இருப்பினும், அனைத்துலக விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க வடகொரிய விளையாட்டு வீரர்கள் வருகை தர ஜப்பான் அனுமதித்துள்ளது.
அடுத்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள விளையாட்டுகளின் 17 போட்டிகளில் பங்கேற்க சுமார் 150 விளையாட்டு வீரர்களை அனுப்ப வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்த விவகாரத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்தப் போட்டியில் வடகொரிய விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது குறித்து ஆசிய விளையாட்டுகள் ஏற்பாட்டுக் குழு எங்கள் விளையாட்டு அமைச்சுடன் கலந்தாலோசித்துள்ளது,” என்று ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் யோஷிமாசா ஹயாஷி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பல்வேறு அமைச்சுகளின் ஆலோசனைகள் மூலம் கோரிக்கையைப் பரிசீலிக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
2023ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளில் வடகொரியா போட்டியிட்டு 11 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 39 பதக்கங்களை வென்றது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


