பிரிஸ்பன்: அனைத்துலக டி20 கிரிக்கெட் போட்டிகளில் முன்னணி பத்து அணிகளில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ஓட்டங்களை எட்டியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்திய அணியின் தொடக்கப் பந்தடிப்பாளர் அபிஷேக் சர்மா.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியின்போது 24 வயதான அபிஷேக் இச்சாதனையை நிகழ்த்தினார். அவர் 528 பந்துகளில் அந்த மைல்கல்லை எட்டினார்.
இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 573 பந்துகளில் 1,000 ஓட்டங்களை எடுத்திருந்ததே முன்னைய சாதனை.
இன்னிங்ஸ் அடிப்படையில் பார்க்கையில், குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் அபிஷேக் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
விராத் கோஹ்லி 27 இன்னிங்ஸ்களில் அந்த மைல்கல்லைத் தொட்ட நிலையில், அபிஷேக் 28 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டுள்ளார். கே.எல். ராகுல் (29), சூர்யகுமார் (31) இருவரும் முறையே அடுத்தடுத்த நிலைகளில் உள்ளனர்.
உலக அளவில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 24 இன்னிங்ஸ்களில் 1,000 ஓட்டங்களை எடுத்து, பட்டியலின் முதல்நிலையில் இருக்கிறார்.
இதனிடையே, ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான ஐந்தாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது, அபிஷேக் சர்மா 23 ஓட்டங்களையும் ஷுப்மன் கில் 29 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.
இதனையடுத்து, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஐந்து போட்டிகள் தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
அதற்குமுன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என வாகைசூடியது.

