மிர்பூர்: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் மூத்த ஆட்டக்காரர் முஷ்ஃபிகுர் ரஹீம் தமது நூறாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து, சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
அயர்லாந்து அணிக்கெதிராக மிர்பூரில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது இந்தச் சாதனையை நிகழ்த்தினார் 38 வயதான ரஹீம்.
புதன்கிழமை (நவம்பர் 19) தொடங்கிய அப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 99 ஓட்டங்களுடன் களத்திலிருந்த ரஹீம், இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது சதத்தைப் பூர்த்திசெய்தார். அவர் 106 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இது அவருக்கு 13வது சதம்.
இதன்மூலம், நூறாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தோர் பட்டியலில் 11வது வீரராக அவர் இணைந்தார்.
இதற்குமுன் கோலின் கௌட்ரி, ஜாவேத் மியாண்டட், கோர்டன் கிரீனிட்ஜ், அலெக் ஸ்டூவர்ட், இன்சமாம் உல் ஹமக், ஹஷிம் ஆம்லா, ரிக்கி பான்டிங், கிரேமி ஸ்மித், ஜோ ரூட், டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது நூறாவது டெஸ்ட் போட்டியில் நூறு ஓட்டங்களை எடுத்தனர்.
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் பங்ளாதேஷ் அணியின் லிட்டன் குமார் தாசும் சதமடித்தார். அவர் 128 ஓட்டங்களை எடுத்தார். பங்ளாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 476 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பங்ளாதேஷ் அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

