தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு

2 mins read
41d2ec38-4de5-48c4-95bd-58da7e3a8421
கிரிக்கெட் ஆல்ரவுண்டர் அஸ்வின்.  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் உலக அளவில் நடைபெறும் பிற டி-20 லீக் தொடர்களில் விளையாட தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

தனது ஐபிஎல் ஓய்வு அறிவிப்பை சமூக வலைத்தளப் பதிவு மூலம் அஸ்வின் பகிர்ந்தார். கடந்த ஆண்டு அவர் அனைத்துலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 38 வயதான அவர் கடந்த 2009ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகே 2010ல் அனைத்துலக கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ரைஸிங் புனே சூப்பர்ஜயண்ட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். கடந்த பருவத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி இருந்தார். ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் 221 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். 833 ஓட்டங்களைப் பந்தடிப்பாளராக எடுத்துள்ளார்.

“சிறப்புமிக்க நாளில் சிறப்பான தொடக்கம். ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று சொல்வதுண்டு. ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது காலம் முடிந்துவிட்டது. ஆனால், உலக அளவில் நடைபெறும் மற்ற டி20 லீக் தொடர்களில் நான் விளையாடுவதற்கான காலம் தொடங்குகிறது.

இத்தனை ஆண்டுகளாக எனக்கு அற்புத நினைவுகளையும், உறவுகளையும் தந்த எனது ஐபிஎல் அணிகளுக்கு நன்றி. முக்கியமாக எனக்கு இத்தனை நாள்களாக அனைத்தும் வழங்கி வந்த ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐக்கு நன்றி. என்னுடைய அடுத்த கட்டத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளேன்,” என அஸ்வின் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்