பெர்த்: ‘ஆஷஸ்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் ‘ஆஷஸ்’ டெஸ்ட் தொடர் உலகப் புகழ் பெற்றது.
ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் பெர்த்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தொடங்கியது.
முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி, மிட்சல் ஸ்டார்க்கின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களுக்குச் சுருண்டது. ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹேரி புரூக் 52 ஓட்டங்கள் குவித்தார்.
இங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியாவும் ஓட்டங்கள் குவிக்கத் தடுமாறியது. முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் 19 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
இறுதியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 132 ஓட்டங்களுக்குச் சுருண்டது. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
40 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து மீண்டும் தடுமாறியது.
அது 164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்காட் போலண்ட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்புடைய செய்திகள்
205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.
ஹெட் 123 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ஒட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது.
இரு நாள்களிலேயே டெஸ்ட் ஆட்டம் முடிந்தது பல ரசிகர்களை வியப்பில் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் பத்து விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் டிசம்பர் 4ஆம் தேதி பிரிஸ்பனில் தொடங்கவுள்ளது.

