மகிழ்ச்சியான, ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்கிக் கொடுத்த தமது வளர்ப்புப் பெற்றோர்க்குப் பெருமை தேடித் தருவதை இலக்காகக் கொண்டுள்ளார் ரவி, 20.
அப்பயணத்தின் முதற்படியாக 2025ஆம் ஆண்டுக்கான கல்விச் சாதனை விருதினைப் பெற்றுள்ளார் இவர்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் முதல் தேர்வில் 7 பாடங்களிலும் உன்னதத் தேர்ச்சி பெற்ற இவர் வளர்ப்புப் பிள்ளைகள், இளையர்களுக்கான விருது வழங்கும் விழாவில் சிறப்பிக்கப்பட்டார்.
ஒரு மாதக் குழந்தையாக ரவி தங்கள் குடும்பத்திற்குள் நுழைந்தது இன்னும் நினைவிருக்கிறது என்றார் வளர்ப்புத் தாயார் லூர்து தாமஸ் ஆட்ரி,56.
இவரது கணவர் ராஜீவ் வேலாயுதம், 58. இந்த இணையர் இதுவரை 17 வளர்ப்புப் பிள்ளைகளை வளர்த்துள்ளனர்.
முதன்முதலில் ஒரு குழந்தையை வளர்த்து, பின்னர் தவிர்க்க இயலாத காரணங்களால் அதனைத் தொடர முடியாமல் போனதால் இனி வளர்ப்புப் பிள்ளைகளை வளர்க்க வேண்டாம் என முடிவெடுத்தபோது ரவி தங்களிடம் வந்ததாகக் கூறினார் ஆட்ரி.
தங்கள் மகனுக்கும் வளர்ப்பு மகனுக்கும் 7 வயது வித்தியாசம் இருப்பதால், ரவியின் வரவால் இரு மகன்களுடன் வீடு விளையாட்டும் பேச்சுமாக மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியதாகவும் அவர் சொன்னார்.
பள்ளி நாள்களிலிருந்தே கணிதப் பாடத்தில் ரவி சற்றுப் பின்தங்கியிருந்தது குறித்துக் கவலை இருந்தாலும், அவரது கவனிக்கும் திறன் மீது தமக்கு நம்பிக்கை இருந்ததைச் சுட்டினார் தாயார் ஆட்ரி.
தொடர்புடைய செய்திகள்
“தனக்கு என்ன கேள்வி இருக்கிறது, அதனை யாரிடம், எப்படிக் கேட்க வேண்டும் என்பதும் ஒரு தனிக் கலை. அதில் பயிற்சி மேற்கொண்டதன் விளைவாக, சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் நல்ல நட்புறவு ஏற்பட்டது. அது அவரின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவியதாக நம்புகிறேன்,” என்றார் அவர்.
“கணிதம் எட்டாக்கனியாக இருந்தது எனது தன்னம்பிக்கையைக் குறைத்தது. பொறியியல் துறைக்குச் செல்ல இயலாது எனும் எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், சக மாணவர்கள் பலரும், தங்களுக்கும் சிரமம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஊக்குவித்தனர்,” என்றார் ரவி.
தற்போது பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் இவர், கல்வி உட்பட தமது எல்லா முன்னேற்றங்களுக்கும் நல்ல குடும்பச் சூழலே காரணம் என்றார்.
“இருபது ஆண்டுகளாக என்னைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வளர்க்கின்றனர். கனிவும், அன்பும், ஊக்கமும் நிறைந்த சூழலைக் கொடுத்த குடும்பத்துக்கு மேன்மேலும் பெருமை தேடித்தர விழைகிறேன்,” என்றார் அவர்.
தமக்கும், 7 வயது மூத்தவரான சகோதரருக்கும் இடையே நல்ல பிணைப்பு இருப்பதாகக் கூறும் ரவி, “எனது மகிழ்ச்சியில், வாழ்வின் முக்கிய முடிவுகளில் அவரது ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கிறது. அது தேவையான ஒன்று,” என்றார்.
ரவியின் ஒவ்வொரு சாதனையையும் முன்னேற்றத்தையும் ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடுவதாகச் சொன்ன தாயார் ஆட்ரே, “அவரைச் சமூகத்தில் சிறந்த மனிதனாக வாழச் செய்வதை வளர்ப்புப் பெற்றோராக எங்கள் சாதனையாகக் கருதுகிறோம்,” என்றார்.
இந்த விருது குடும்பத்தினர்க்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளதாக இருவரும் தெரிவித்தனர்.
வளர்ப்புப் பிள்ளைகள், இளையர்க்கான விருதுகள்
இவ்வாண்டுக்கான வளர்ப்புப் பிள்ளைகள், இளையர்களுக்கான விருது வழங்கும் விழா சனிக்கிழமையன்று (நவம்பர் 15) வாழ்நாள் கற்றல் கழகத்தில் நடைபெற்றது.
இதில் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
“குழந்தைகளுக்கு முக்கியத் தேவையான பாதுகாப்பான, நிலையான சூழலை வழங்கத் தங்கள் இல்லத்தையும் இதயத்தையும் பெற்றோர் பலர் திறந்துள்ளனர். இது பிள்ளைகள் அன்பையும் ஆதரவையும் உணர வாய்ப்பாக அமைகிறது,” என்று அவர் பாராட்டினார்.
பிள்ளைகளின் மனநலனையும் இது மேம்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூலை மாதம் முதல் வளர்ப்புப் பெற்றோர்க்கான தகுதித் தேவைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிய அவர், மேலும் பலர் பிள்ளைகளை வளர்க்க முன்வருவார்கள் என நம்புவதாகச் சொன்னார்.
இரு விருதாளர்களின் சாதனைகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், சவால்களைக் கடந்து சாதித்த அனைத்து விருதாளர்களையும் வாழ்த்தினார்.
விழாவில் நான்கு பிரிவுகளில் 24 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கல்விச் சாதனை விருது ஒன்பது பேருக்கும், விளையாட்டு, கலைச் சாதனை விருதுகள் ஏழு பேருக்கும் வழங்கப்பட்டன. மேலும், ஆறு பேருக்குக் குணநலன் மேம்பாட்டு விருதும், இருவருக்குத் தலைசிறந்த சாதனையாளர் விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

