பலரால் இன்றளவும் பின்பற்றி வரப்படும் யோகாசன உடற்பயிற்சி, ஒருவரின் நல்வாழ்வுக்குப் பல பயன்களை அளிப்பதாக நம்பப்படுகிறது.
சனிக்கிழமை (ஜூன் 21) அனைத்துலக யோகா தினம். உலகெங்கும் இந்நாளைக் கொண்டாடிவரும் வேளையில் சிங்கப்பூரிலும் கொண்டாட்ட உணர்வு எதிரொலித்தது.
கரையோரப் பூந்தோட்டத்துடன் இணைந்து சிங்கப்பூர் இந்தியத் தூதரகம், யோகா தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் ‘ஓர் உலகிற்கும், ஓர் ஆரோக்கியத்திற்கும் யோகா’.
“பருவநிலை மாற்றம், பொதுச் சுகாதார விவகாரங்கள், மனவுளைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வரும் பலருக்கு யோகா மனநிலையை நிதானப்படுத்தி, சாந்தமாக்க வழியமைக்கிறது,” என்று சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பக் அம்புலே கூறினார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய திரு தினேஷ் வாசு, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான 60 ஆண்டுகால தூதரக உறவை இந்த ஆண்டு குறிப்பதால், இந்த தினம் சிங்கப்பூரர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சமஸ்கிருதத்தில் யோகா என்றால் ‘ஒன்றிணைவது’ என்பது பொருள் என்று சொன்ன அவர், யோகா தனிநபர்களை இணைப்பதிலும் கலாசாரங்களைக் கடக்கும் திறனையும் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், வியாசா யோகாவைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்கள் நடத்திய யோகா நிலைகளில் ஈடுபட்டனர். அவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து மகிழ்ந்தனர்.
11 ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாட்டு பொதுச் சபை, ஜூன் 21ஆம் தேதி அனைத்துலக யோகா தினம் என்று அறிவித்திருந்தது.
பலவகை பயன்களை அளிக்கும் உடற்பயிற்சியாகக் கருதப்படும் யோகா, ஒருவரின் நெகிழ்வுத்தன்மை, வலிமை, தோரணையை மேம்படுத்துவதோடு, மன அழுத்தம், பதற்றத்தையும் குறைத்து, மிகவும் சமநிலையான வாழ்க்கைக்கு வழியமைப்பதாக நம்பப்படுகிறது.