மூத்த குடிமக்களுக்கான தனிப்பட்ட வசதிகளுடன் இயோ சூ காங் சமூக மன்றம் புதுப்பிப்புப் பணிகளுக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
குறிப்பாக முதுமைக்கால மறதிநோயுற்றோர்கள் (டிமென்ஷியா) பாதை தடுமாறாமல் இருக்க, மன்றத்தின் ஒவ்வொரு மாடியும் வெவ்வேறு வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. மின்தூக்கிக்கான வழிகாட்டி குறிப்புகள், பல்வேறு வசதிகளுக்கான சின்னங்கள் முதியோர்கள் உடனே அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு முடிவடையவேண்டிய புதுப்பிப்புப் பணிகள், பெருந்தொற்றால் தடைபட்டன. மேம்பாட்டுக்குப் பிறகு, சமூக மன்றத்தின் அளவு 60 விழுக்காடு அதிகரித்துள்ளது.
50 வயதுக்கு மேற்பட்ட 40 விழுக்காட்டு மக்கள் வாழும் இயோ சூ காங் தொகுதியின் குடியிருப்புப் பேட்டையில் மறதி நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு உகந்த வசதிகளை 2025ஆம் ஆண்டுக்குள் ஏற்படுத்தித்தரும் திட்டத்தில் இதுவும் ஓர் அங்கமாகும்.
அந்த சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டம், 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரில் முதியோருக்கு வசதிகள் நிறைந்த சுற்றுச்சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
இயோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திரு யிப் ஹொன் வெங், சமூக மன்றத்தின் மேம்பாடு, முதியோர் வசதிகளுடனான உள்கட்டமைப்புத் திட்டத்தின் கடைசித் தொகுப்பாகும் என்று குறிப்பிட்டார்.
இயோ சூ காங்கின் பத்து அக்கம்பக்கப் பேட்டைகளும் தனிப்பட்ட வடிவங்கள் பெற்றுள்ளன. கனி வகைகள், சுவரோவியங்கள், வரவேற்பு வளைய வாயில்கள் என ஒவ்வொரு பேட்டைக்கும் தனித்தனி அடையாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் திறப்புவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் மிகவும் மூப்படைந்த சமூகமாக மாறிவிடும் எனச் சுட்டிய திரு லீ, அந்நிலையை இயோ சூ காங் ஏற்கெனவே எட்டிவிட்டது என்றும் சொன்னார். ஐவரில் ஒருவர் 65 வயதை எட்டியவராக இருப்பது மிகவும் மூப்படைந்த சமூகமாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூரின் பழைய வட்டாரங்களில் ஒன்றான அங் மோ கியோவின் பல பகுதிகளும் மிகவும் மூப்படைந்த சமூக நிலையை எட்டி வருகின்றன என்றும் அதற்கு மற்றப் பகுதிகளில் உள்ளோரைக் காட்டிலும் அங்கு வயதானவர்கள் அதிகமாக உள்ளதே காரணம் என்றும் மூத்த அமைச்சர் லீ கூறினார்.
“அவர்கள் அன்றாட நடவடிக்கைகளைச் சிரமமின்றி மேற்கொள்ளவும் துடிப்புடன் இருக்கவும் ஏதுவான சூழலையும் வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்,” என்றார் திரு லீ.

