ஆண்டிறுதிப் பள்ளி விடுமுறைக் காலத்தில் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக மலேசியா செல்லும் பயணிகள், போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாள்களில் மலேசியா செல்வோர், கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கலாம் என்பதைக் கருத்தில்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தீபாவளி வார இறுதியில் (அக்டோபர் 17 முதல் 20 வரை) மலேசியா சென்ற பயணிகள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம்வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
அந்த நாள்களில் மட்டும் ஏறத்தாழ இரண்டு மில்லியன் பயணிகள் இரு சோதனைச் சாவடிகளையும் கடந்தனர்.
அக்டோபர் 17ஆம் தேதி மட்டும் 550,000க்கும் மேற்பட்ட பயணிகள் எல்லையைக் கடந்தனர்.
மின்சிகரெட் கடத்தலை முறியடிக்கும் விதமாக சோதனைச்சாவடிகளில் சோதனை நடப்பதால் சில நேரங்களில் பயண நேரம் கூடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குடிநுழைவு அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படியும் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும்படியும் ஆணையம் பயணிகளைக் கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
மேலும் மாற்று ஏற்பாடாகப் பயணிகள், மலேசியாவுக்குச் சென்று வரும் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் திங்கட்கிழமையன்று (நவம்பர் 17) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

