ஜூரோங் வட்டாரப் பாதை பெருவிரைவு ரயில் பாதைக்கான (எம்ஆர்டி) கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் வியாழக்கிழமை (நவம்பர் 13) கீழே விழுந்து உயிரிழந்தார்.
அந்தக் கட்டுமானத் தளம் ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ளது. இச்சம்பவம் 202 பாண்டான் கார்டன்சுக்கு அருகே உள்ள கட்டுமானத் தளத்தில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது.
மாண்ட கட்டுமான ஊழியருக்கு வயது 46. அவர் கட்டுமானப் பணியில் இருந்தபோது ஒன்பது மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டதாக மனிதவள அமைச்சும் நிலப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்தன.
அந்த ஊழியர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் மாண்டது உறுதிசெய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட கட்டுமானத் தளத்தில் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. அதிக உயரத்தில் நடக்கும் எல்லா நிலப் போக்குவரத்து ஆணையத் திட்டங்களிலும் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணையம் சொன்னது.
மாண்ட ஊழியர், லெஸெ கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்நிறுவனம், டேவூ-யோங்னாம் கூட்டு நிறுவனங்களுக்குப் பணியாற்றிவரும் நிறுவனத்துக்குச் சொந்தமானது என நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.
இவ்வாண்டு முற்பாதியில் கட்டுமானத் துறையில் 76 பேர் உயிரிழந்தனர் அல்லது மோசமான காயங்களுக்கு ஆளாயினர். இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதைவிட ஐந்து குறைவு.

