9,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ள லம்போர்கினி உருஸ் வகை காரை ஒரு தம்பதி ஒரு கார் வணிக நிறுவனத்திடம் விற்றனர். ஆனால், அந்த கார் உண்மையாக 18,074 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது என்று கார் பரிசோதனையில் தெரிந்த வந்த பிறகு, அது தங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறி, காரை விற்றவர் மற்றும் அவரது கணவர் மீது அந்த கார் வணிக நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
‘பர்பஸ் ஆட்டோமொபைல்ஸ்’ எனும் அந்த நிறுவனம், காரை விற்ற திருமதி வெர்ஜீனியா வோங்கிற்கு எதிராக $145,500 இழப்பீடு கோரியது. பொய்யான தகவல் கூறியதால், அந்த சொகுசு காரை வாங்கும் உத்தேச வாடிக்கையாளருக்கு விற்கும் முயற்சியில் அந்நிறுவனம் தோல்வியடைந்ததாகக் கூறியது.
காரின் முக்கிய ஓட்டுநராக இருந்து அதன் அனைத்து விவகாரங்களையும் கையாண்ட திருமதி வோங்கின் கணவர் திரு லிம் வெய் மெங்கிற்கு எதிரான வழக்கு, அவருக்கு எதிரான சேதங்களை மதிப்பிடும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 17 அன்று, மாவட்ட நீதிபதி திம் மெய் லிங், திருமதி வோங்கின் ஒப்பந்த மீறலால், விற்பனை நிறுத்தப்படவில்லை என்றும், ஒப்பந்தம் முடிந்திருந்ததால் நிறுவனம் ஈட்டியிருக்கும் லாபத்திற்கு அந்த நிறுவனம் உரிமை கோரவில்லை என்றும் முடிவு செய்தார்.
மாவட்ட நீதிபதி எழுதிய ஓர் எழுத்துபூர்வ தீர்ப்பில், காரின் உத்தரவாதத்தை அங்கீகரிக்கப்பட்ட வியாபாரி ரத்து செய்ததால், உத்தேச வாடிக்கையாளர் விற்பனையைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.
திருமதி வோங் கூறிய பொய்யான தகவலால் நேரடியாக ஏற்படும் இழப்புகளை மட்டுமே கோர ‘பர்பஸ் ஆட்டோமொபைல்ஸ்’ நிறுவனத்திற்கு உரிமை உண்டு என்றும் காரின் உத்தரவாதத்தை ரத்து செய்ததால் ஏற்படும் இழப்புகளுக்கு அல்ல என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.
திருமதி வோங்கிற்கு $20,000 இழப்பீட்டை வட்டியுடன் சேர்த்து வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

