தனது மகளை ஒரு பிரபலமான தொடக்கப் பள்ளியில் சேர்ப்பதற்காக தனது முகவரி குறித்து பொய் சொன்னதற்காக 42 வயதுப் பெண் ஒருவருக்கு வியாழக்கிழமை (நவம்பர் 13) ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இக்குற்றத்துக்கு அரசுத் தரப்பு அபராதம் கோரியிருந்தது. ஆனால் இந்த வழக்கின் மோசமான தன்மை, அதில் அவரது திட்டமிட்ட ஏமாற்று வேலை மற்றும் சுயநல நோக்கங்கள் ஆகியவை அடங்கியுள்ளன என்பதால், மாதுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையைக் கேட்ட பிறகு, அந்தப் பெண் நீதிபதியிடம் தனக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், தான் சிறைக்குச் செல்ல முடியாது என்றும் தனது மகளைப் பார்த்துக்கொள்ள தான் தேவை என்றும் அவர் கூறினார்.
சிறுமியான அவரது மகளின் அடையாளத்தைப் பாதுகாக்க நீதிமன்றம் ஒரு தடை உத்தரவை விதித்ததால், அந்தப் பெண்ணின் பெயரை வெளியிட முடியாது. இந்தத் தடை உத்தரவு, பள்ளியின் பெயருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பள்ளி அந்தச் சிறுமியை மற்றொரு பள்ளிக்கு மாற்றியது.
பொதுத்துறை ஊழியர்களிடம் தவறான தகவல்களை வழங்கியதாகவும், முகவரி மாற்றத்தைப் பற்றி கூறும்போது தவறான தகவல்களை வழங்கியதாகவும் செப்டம்பர் மாதம் சுமத்தப்பட்ட தலா ஒரு குற்றச்சாட்டை அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது மூன்றாவது குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
சிங்கப்பூர் சமூகத்தில் கல்வி ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது என்றும் பிள்ளைக்கான பள்ளியைத் தேர்வு செய்யும்போது பெற்றோரின் உள்ளுணர்வைத் தூண்டும் அல்லது அதிக நம்பிக்கை, பதற்றம் மற்றும் தீர்மானத்தைத் தூண்டும் சில முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றும் மாவட்ட நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி-ஷனாஸ், வியாழக்கிழமை கோடிகாட்டினார்.
“கல்வி அமைச்சால் செயல்படுத்தப்படும் பள்ளிச் சேர்க்கைக் கட்டமைப்பு, வெளிப்படையாகவும் முறையாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.
“அதைச் சீர்குலைக்க முயலும் குற்றங்கள், சமூகத்தின் மையத்தில் இருக்கும் மதிப்புகளைக் குறைத்து, குற்றவாளிக்குச் சாதகமாக அமைந்துவிடுகின்றன,” என்றும் நீதிபதி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
முகவரி மாற்றம் பற்றி தெரிவிக்கும்போது தவறான தகவலை வழங்கியதற்காக, அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $3,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கக்கூடும்.

