தீவிரவாதத்திற்கு மாறத் துணைபோகும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை

2 mins read
be813112-46b5-4a2c-a349-1ed9796044cf
சுயமாகத் தீவிரவாதப்போக்கிற்கு மாறிய இளையர்கள் சம்பந்தப்பட்ட சில சம்பவங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பங்கிருந்ததாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஃபை‌ஷால் இப்ராகிம் தெரிவித்தார். - படம்: பெரித்தா ஹரியான்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்படுவோர் அண்மை ஆண்டுகளில் இளையராக இருக்கும் போக்கு மிகவும் கவலையளிப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌ஷால் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

உணர்வுகளைத் தூண்டக்கூடிய பிரசாரங்களை உருவாக்கவும் நம்பக்கூடிய குரல்களை நகலெடுக்கவும் தீவிரவாதக் குழுக்கள் இப்போது செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. தீவிரவாதச் சித்தாந்தத்தை நவீனமயப்படுத்தவும் அதிகமானோருக்கு அது சென்றடையவும் அந்தத் தொழில்நுட்பம் உதவக்கூடும் என்று உள்துறை மூத்த துணையமைச்சருமான இணைப் பேராசிரியர் ஃபை‌ஷால் கூறினார். மேலும், திரித்துக் கூறப்படும் தகவல்களில் இருந்து உண்மையைப் பிரித்துப் பார்ப்பதை அது இளையர்களுக்கு இன்னும் சிரமமாக்கும் என்றார் அவர்.

சுயமாகத் தீவிரவாதப்போக்கிற்கு மாறிய இளையர்கள் சம்பந்தப்பட்ட சில சம்பவங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பங்கிருந்ததாகவும் இணைப் பேராசிரியர் ஃபை‌ஷால் சொன்னார். திங்கட்கிழமை (நவம்பர் 17) நடைபெற்ற எட்டாவது மதரசா கருத்தரங்கில் அவர் பேசினார். உள்துறை அமைச்சும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த அந்தக் கருத்தரங்கில் சுமார் 160 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

சென்ற ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் கைதான 17 வயது இளையர், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கச் செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலியைப் பயன்படுத்தியதை இணைப் பேராசிரியர் ஃபை‌ஷால் நினைவுகூர்ந்தார். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தப் பிரகடனம் செய்யவும் இளையர் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக அவர் சொன்னார்.

தெம்பனிசில் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல அந்த இளையர் சதித்திட்டம் தீட்டியிருந்தார். ஆனால், அதற்கு ஒருசில வாரங்களுக்கு முன்னரே அவர் கைதுசெய்யப்பட்டார்.

ஆக அண்மையில் இவ்வாண்டு மார்ச் மாதம், தீவிர வலசாரிச் சித்தாந்தத்தால் தூண்டப்பட்ட இன்னொரு 17 வயது இளையர் கைதானார். உள்ளூர்ப் பள்ளிவாசல்களில் துப்பாக்கிகளைக் கொண்டு அவர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார். இணையத்தில் துப்பாக்கிகளை வாங்க முயன்றதையும் துப்பாக்கி உதிரிபாகங்களை முப்பரிமாண முறையில் அச்சடிக்கும் சாத்தியத்தை அவர் ஆராய்ந்ததையும் இணைப் பேராசிரியர் ஃபை‌ஷால் சுட்டினார்.

அந்தச் சம்பவங்களில் சரியான நேரத்தில் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து, அசம்பாவிதத்தைத் தடுத்துநிறுத்தியதாக அவர் சொன்னார்.

“மீள்திறன், விழிப்புணர்வு, முன்கூட்டியே தலையிடுதல் ஆகியவற்றுக்கான அவசியத்தை அத்தகைய சம்பவங்கள் நினைவூட்டுகின்றன,” என்றார் இணைப் பேராசிரியர் ஃபை‌ஷால்.

“தலையிடுவது இளையர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்காக அன்று. மாறாக, இளையர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்வதையும் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதையும் தடுத்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவே,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்