தொண்டூழியர்களை அங்கீகரித்த விருதுகள்

2 mins read
13454e96-bea5-4a84-87e6-39f2f99a550b
திருவாட்டி அனிதா ஃபாம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

இவ்வாண்டின் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தொண்டூழியர், பங்காளி விருது வழங்கும் விழாவில் தங்கள் சமூகப் பங்களிப்புகளுக்காக ஏறத்தாழ 140 தொண்டூழியர்களும் பங்காளிகளும் விருது பெற்றனர்.

முதன்முறையாக இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை தேசிய சமூக சேவை மன்றத்தின் தலைவர் அனிதா ஃபாம் பெற்றுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு தலைமைத்துவப் பொறுப்புகளின் மூலம் உன்னத சமூக சேவை ஆற்றி வரும் இவர், உடல்நலம், உடற்குறையுற்றோர்க்கான சேவைகள், நோய்த் தடுப்புப் பராமரிப்பு எனப் பல துறைகளில் பெருமாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

தொண்டூழியர்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரித்து, சமூக சேவை அமைப்புகளையும் நிறுவன பங்காளிகளையும் கொண்டாடும் வகையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடந்த இந்த விருது விழா விளங்கியது.

இவ்வாண்டின் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் விருது விழாவில் நான்கு புதிய பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த நிறுவனத்திற்கான விருது, சிறந்த பங்காளி விருது, வாழ்நாள் சேவை விருது ஆகியனவே அவை.

“தனிமனிதர்களாக, அமைப்புகளாக, சமூகமாக, நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம்,” என்று சமூக இணக்கத்தை வலுப்படுத்துவதில் தொண்டூழியர்களின் இன்றியமையாமையை வலியுறுத்தினார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.

விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இவர், இப்போது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சோடு இணைந்து சேவையாற்றும் 3,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களின் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்ற மறுவடிவமைக்கப்பட்ட வேலைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், புதிய தொண்டூழியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மசகோஸ் தெரிவித்தார்.

$30 மில்லியன் நன்கொடை வழங்கிய டிபிஎஸ், சிறு பிள்ளைகளின் மேம்பாட்டிற்காக $3 மில்லியன் நன்கொடை அளித்த எஸ்பி குழுமம் போன்ற நிறுவனப் பங்காளிகளின் சேவையும் சமூக சேவை அமைப்புகளின் பங்களிப்புகளையும் அவர் மெச்சினார்.

அத்துடன், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் முதலாவது விளைபயன் புள்ளி அட்டையையும் (Impact Score Card) அமைச்சர் மசகோஸ் அறிமுகப்படுத்தினார்.

சேவை மணிநேரங்கள், பயனடைந்த பங்காளிகள் எனத் தொண்டூழியர்களின் வருடாந்தரப் பங்களிப்புகளை எடுத்துக்காட்டும் விதமாக இந்தப் புள்ளி அட்டை விளங்கும்.

குறிப்புச் சொற்கள்