மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறை: இஸ்ரேலியர்கள் நால்வருக்கு சிங்கப்பூர் தடை

2 mins read
29e13384-c5d7-4a2a-9c88-4b84c4f2612c
தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள (கடிகார வரிசை) மெர் மொர்டெக்காய் எட்டிங்கர், எலி‌ஷா யெரெட், பென்-ஸியோன் கொப்ஸ்டீன், பரூக் மார்ஸெல். - படங்கள்: இபிஏ, ராய்ட்டர்ஸ்

இஸ்ரேலியர்கள் நால்வர் மீது சிங்கப்பூர் உடனடியாகத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கவுள்ளது; அவர்கள் இங்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) கூறியது.

அந்த நால்வர், மெர் மொர்டெக்காய் எட்டிங்கர், எலி‌ஷா யெரெட், பென்-ஸியோன் கொப்ஸ்டீன், பரூக் மார்ஸெல் ஆகியோர் ஆவர். இவர்கள் மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தத் தனிநபர்கள் மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு எதிராகக் கொடூரமான பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

“இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை. இரு நாடுகளை உருவாக்க வகைசெய்யும் தீர்வை சிறுமைப்படுத்தி அதற்கு இடையூறு விளைவிப்பவை,” என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

அனைத்துலகச் சட்டத்தின்படி, மேற்குக் கரையில் இஸ்ரேலிய சமூகத்தினர் இருப்பது சட்டவிரோதமானது என்பதை வலியுறுத்திய வெளியுறவு அமைச்சு, இஸ்ரேலிய சமூகம் அங்கு தொடர்ந்து இருந்தாலோ விரிவடைந்தாலோ இரு நாடுகளை உருவாக்க வகைசெய்யும் ஆக்ககரமான தீர்வை எட்டுவது மிகவும் சிரமமாகிவிடும் என்று அமைச்சு விவரித்தது. அனைத்துலகச் சட்டம், இரு நாடுகளை உருவாக்க வழிவகுக்கும் தீர்வு ஆகியவற்றுக்கு வலுவான ஆதரவு அளிப்பவர்கள் என்ற முறையில், சட்டவிரோதச் செயல்களின் மூலம் ஒரு தரப்பினர் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் இறங்குவதை சிங்கப்பூர் எதிர்ப்பதாக அமைச்சு சுட்டியது.

“ஓரிடத்தில் குடிபுகுந்து வன்முறையில் ஈடுபடும் எல்லாச் செயல்களையும் கட்டுப்படுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்துக்குக் குரல் கொடுக்கிறோம். தவறு இழைப்பவர்களைப் பொறுப்பேற்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்குப் பொறுப்பான, அங்குக் குடிபுகுந்த தீவிர வலது சாரி குழுக்களின் தலைவர்களுக்கு எதிராக சிங்கப்பூர் தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அமைச்சர்நிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேற்குக் கரையில் ஈ1 குடியேறிகள் சமூகத் திட்டத்தைத் தொடரப்போவதாக இஸ்ரேலிய அரசாங்கம் முடிவெடுத்திருந்தது. அந்நடவடிக்கை, மேற்குக் கரை வட்டாரத்தைப் பிரியச் செய்யும் என்று நம்பப்படுகிறது.

அதனையடுத்து, சிங்கப்பூர் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்