சிங்கப்பூரில் பலருக்கும் மின்சிகரெட்டுகளை விநியோகித்த சந்தேகத்தின் தொடர்பில் கும்பலொன்றின் 13 உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களாய் அவர்கள் இருந்ததாக வியாழக்கிழமை (அக்டோபர் 30) குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும் ஒருவர் மீது அத்தகைய குற்றச்சாட்டு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்படும் என்று நம்பப்படுகிறது.
விற்பனை செய்வதற்காக மின்சிகரெட்டுகளை வைத்திருந்தது அல்லது அதற்குத் திட்டமிட்டதன் தொடர்பில் 14 சந்தேக நபர்கள் மீதும் ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறையின் விசாரணைகளுக்காக அவர்கள் அனைவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், 25 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் மின்சிகரெட்டுகளை இறக்குமதி செய்து, இங்குள்ளோருக்கு விநியோகித்ததாக அந்தக் கும்பல் சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.
திட்டமிட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் என்பது நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு $100,000 வரை அபராதமோ ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.
ஒருவர் மின்சிகரெட்டுகளை இறக்குமதி செய்தது, விநியோகித்தது அல்லது விற்றது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் $10,000 அபராதம் அல்லது ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.


